வியாழன், 13 மே, 2021

கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்கள்; பிகார், உ.பி. மக்களை நடுங்க வைத்த சம்பவம்

 

உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் கங்கை ஆற்று கரையோரங்களில் சுமார் 100 பிணங்கள் மிதந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நீரில் மிதந்த அனைத்து உடல்களும் சிதைந்த நிலையிலும், வீங்கிய நிலையிலும் கங்கை ஆற்றுப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. கங்கை ஆற்றில் கண்டறியப்பட்டுள்ள உடல்கள், பீகார் மற்றும் உத்தர பிரதேச மக்களிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரகளின் உடல்களாக இருக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் 71 உடல்களும், உத்தர பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் 25 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்த உடல்களில் இருந்து கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த உடல்கள் உத்தர பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் இருந்து மிதந்து வந்திருக்கலாம் எனவும் பக்ஸர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விசயத்தில் மத்திய அரசு மிகுந்த கவனம் எடுத்துள்ள நிலையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், இரு மாநிலங்களிலும் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கங்கை ஆற்றின் பக்தி தன்மையையும், பராமரிப்பையும் தொடர்ந்து பாதுகாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ள் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணையும் நடவடிக்கையும் தேவை என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பக்ஸர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார், ‘இது வரை கங்கை ஆற்றில் இருந்து 71 உடல்களை அப்புறப்படுத்தி உள்ளோம். அனைத்து உடல்களுக்கும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, டி.என்.ஏ பரிசோதனையும், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் அரசு வழிகாட்டுதல்களின் படி, அனைத்து உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடல்கள் உள்ளூர் வாசிகளின் உடல்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த உடல்களில் சில உத்தர பிரேதச பகுதியில் இருந்து கூட,மிதந்து வந்திருக்கலாம். இது, பீகார் மற்றும் உத்தர பிரதேச காவல்துறை விசாரணைக்கு உள்பட்டது’, என்றார்.

உத்தரபிரதேசத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பிரசாந்த் குமார், இறந்த சடலங்கள் பீகார் மாநிலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது பீகார் அரசின் பொறுப்பாகும். இந்த சம்பவத்தில் உத்தர பிரதேச அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை’, என இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

இறந்த உடல்களை ஆற்றில் கொட்ட அனுமதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, உள்ளூர் நிர்வாகம் கங்கை மலைத்தொடர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பக்ஸர் மாவட்ட நீதிபதி அமன் சமீர் தெரிவித்துள்ளார். பக்ஸர் மாவட்டத்தில் இதுவரை, 1,172 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். பக்ஸர் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 26 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றில் இறந்தவர்களின் உடலை விடும் வழக்கத்தை நிறுத்துமாறு உத்தர பிரதேச அரசு ஏற்கனவே சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த உத்தரவு மாநிலத்தில் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஏ.டி.ஜி குமார் தெரிவித்துள்ளார்.

பக்ஸரில் உள்ள சடலங்கள் திங்கள் கிழமை அன்று அந்த கிராமத்தின் செளசா கிராமத்தின் ஆற்றின் குறுக்கே மகாதேவா தகன மைதானத்திற்கு அருகிலுள்ள கிராம மக்களால் முதலில் பார்க்கப்பட்டது. அதன் பின், அவர்கள் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/nearly-100-bodies-found-floating-in-ganga-spark-panic-in-bihar-up-302333/

Related Posts: