செவ்வாய், 18 மே, 2021

மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்

 கொரோனா காலத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. 2 வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்கள் மற்றும் வெளி மாவட்டங்கள், நகரங்களில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் நபர்களுக்காக மீண்டும் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது மாநில அரசு.

தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையத்தில் நீங்கள் இ-பாஸ் பதிவு செய்து கொள்ளலாம். அதில் உங்களின் செல்போன் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அருகில் கேப்சா எண் இருக்கும். அதனை பதிவு செய்த பிறகு உங்களின் செல்போன் எண்ணிற்கு ஓ.டி.பி எண் வரும். அந்த எண்ணை பதிவு செய்தால், இ-பதிவுக்கான பாரம் உங்களுக்கு கிடைக்கும். அதில் உங்களின் பயண தேதி, பயணம் செய்பவர்களின் பெயர், உங்களின் வாகன எண், எங்கிருந்து எங்கே செல்கிறீர்கள், பயணத்திற்கான காரணம் ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.

பயணம் செய்வதற்கான காரணங்களை நீங்கள் உள்ளீடு செய்யும் போது அதற்கான ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்றால் திருமண பத்திரிகையை நீங்கள் அங்கே பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு உங்களின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்ட் அல்லது பாஸ்போட் ஆவணங்களில் ஒன்றை அளிக்க வேண்டும்.

ரயில் மூலம் பயணிகள் பயணிக்கிறீர்கள் என்றால் டிக்கெட் நகல், ரயில் எண், பெட்டி, புறப்படும் இடம், வந்து சேரும் இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் இது ரயில் நிலையத்திற்கு வருவதற்கான பாஸ் மட்டுமே. ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் இடத்திற்கு செல்ல இந்த பாஸை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/covid19-second-wave-tamil-nadu-lockdown-how-to-register-epass-to-travel-other-districts-303929/

Related Posts: