வெள்ளி, 7 மே, 2021

யார் யாருக்கு முக்கிய இலாகா?

 மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், 34 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர்களுக்கும் புதுமுகங்களுக்கும் அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்பில் மகேஷ், சி.வி.கணேசன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகிய 14 பேருக்கு முதல்முறையாக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட சமூகங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, நிதித்துறை, தொழில்துறை, உயர்க் கல்வித்துறை ஆகிய முக்கிய துறைகள் சீனியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல, அன்பில் மகேஷுக்கு முக்கிய துறைகளில் ஒன்றான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகத்துறை, ஆட்சிப்பணி, போலீஸ், மாவட்ட வருவாய், உள்துறை, சிறப்பு திட்டங்களை அமல்படுத்துதல் ஆகிய முக்கிய இலாக்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலினே வைத்துக்கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பொதுப்பணித்துறையும், பி.டி.ஆர்.பழனிவேல் தியகராஜனுக்கு நிதித்துறையும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும் துரைமுருகனுக்கு நீர்ப்பாசனத் துறையும் கேன்.என்.நேருவுக்கு உள்ளாட்சித்துறையும் திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொன்முடிக்கு உயர் கல்வித்துறையும் தங்கம் தென்னரசுவுக்கு தொழில்துறையும் ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துறை என முக்கிய துறைகள் யாவும் சீனியர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை அளிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/ministers-list-important-departments-for-kn-nehru-ev-velu-ponmudi-anbil-mahesh-senthil-balaji-300679/