ஞாயிறு, 9 மே, 2021

சமூகநீதி பேசும் கட்சி எண்ணிக்கை குறைவாக உள்ள சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது எப்போது?

 மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கருத்துக் கணிப்புகளில் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டதால் வாக்களித்த சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் சில குறிப்பிட்ட சமூகங்கள் அமைச்சரவையில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்த சூழலில்தான், நேற்று (மே 6) அமைச்சர்கள் பட்டியல் வெளியானதுமே அந்த அமைச்சர்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள், அதிலும் எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது உள்பட குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதும் பேசப்பட்டது.

சமூக ஊடகங்களின் காலத்தில் இன்றைக்கு எல்லாமே உடனுக்குடன் விவாதிக்கப்படுகிறது. வேகமாக பரப்பப்படுகிறது. ஆனால், அதிலும் ஒரு பெரும்பான்மை போக்கே நிலவுகிறது. சமூக ஊடகங்களில் அமைச்சர்களின் சாதியைக் குறிப்பிட்டு, வெள்ளாள கவுண்டர் – 4, வன்னியர்-3, கள்ளர் – 3, நாடார் – 3, யாதவர் – 2, இஸ்லாமியர்கள் – 2, துளுவ வேளாளர் – 2, ரெட்டியார் – 2, ஆதிதிராவிடர் பறையர் – 1, தேவேந்திர குல வேளாளர்- 1, அருந்ததியர் – 1, முத்தரையர் – 1, கம்மவார் நாயுடு – 1, பலிஜா நாயுடு – 1, போயர் நாயுடு – 1, மீனவர் – 1, படுகர் – 1, மறவர் – 1, இசை வேளாளர் – 1, செட்டியார் – 1, செங்குந்தர் முதலியார் – 1 சாதி ரீதியாக அமைச்சர்களின் எண்ணிக்கை வெளியானது. இதில் 2 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் திமுக இந்த முறை எந்தெந்த சாதிகளுக்கு எத்தனை அமைச்சர்களை ஒதுக்கியுள்ளது என்ற விவாதப்போக்கு என்பது அரசியலில் சாதி எவ்வளவு ஆழமாக தாக்கத்தை செலுத்துகிறது என்பதையே காட்டியது. அதே நேரத்தில், எண்ணிக்கையில் குறைவான புலப்படாத சாதிகளுக்கும் (Invisible Castes) விழிப்புணர்வு இல்லாத சாதிகளுக்கும் தேர்தலிலும் அமைச்சரவையிலும் பிரதிநிதித்துவம் எப்போதுமே அளிக்கப்படுவதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் திமுக, 33 அமைச்சர்களில் 2 அமைச்சர்கள் மட்டும்தான் பெண்கள் என்பது நியாயமில்லாதது என்று பேராசிரியர் லட்சுமணன் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையை அமைத்துள்ளார், அதில் எல்லா சமூகங்களையும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளாரா? என்பது குறித்து சென்னையில் எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தின் பேராசிரியர் சி.லட்சுமணனன்-இடம் ஐ.இ தமிழ் தொடர்பு கொண்டு பேசினோம்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களின் தேர்வு குறித்து சி.லட்சுமணன் கூறியதாவது: “அமைச்சர்களை தேர்வு செய்யும்போது அவர்கள் ஒரு சீரியஸான முயற்சி எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அந்த சமூகங்ளின் எண்ணிக்கை அடிப்படையிலும் விழிப்புணர்வாக இருக்கிற சமூகங்கள் சார்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தருகிற முயற்சி எடுத்திருக்கிறார்கள். அது நன்றாக தெரிகிறது. பெரும்பான்மை சாதிகளின் குழுக்களுக்கு அதற்கான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அதில் சில வேறுபாடுகள் இருக்கலாம். எப்போதும் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. ஆனால், அந்த முயற்சி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

கவுண்டர்கள், ரெட்டியார்கள், அகமுடையார்கள், வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கொடுத்திருக்கிறார்கள். பட்டியல் இன மக்களில் பெரும்பான்மையாக உள்ள 3 குழுக்களுக்கு ஆளுக்கு 1 என்று கொடுத்திருக்கிறார்கள். இதில் சிலர் நாங்கள் பெரும்பான்மையாக உள்ளோம் எல்லோரையும் ஒன்றாக பார்ப்பது சரியா என்பார்கள். ஆனால், இதற்கு முன்னால், தமிழக அமைச்சரவையில் இருந்த பிரதிநிதித்துவமும் இப்போது அமைச்சரவை பங்களித்திருக்கிற பிரதிநிதித்துவமும் வேறுபட்டிருக்கிறது. இது எளிதான வேலை இல்லை.

பல நூறு சாதிகள் இருக்கிற மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கிற சாதி குழுக்களை திருப்திப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. அதை சரியாக செய்திருக்கிறார்கள்.

எண்ணிக்கை அளவிலும் விழிப்புணர்விலும் முன்னிலை அடைந்த சாதிக் குழுக்களுக்கு அளித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், எண்ணிக்கை அளவில் அதிகமாக இருந்தாலும் அவர்களுடைய விழிப்புணர்வு, அரசியல் பொருளாதார அளவில் குரல் கொடுக்க முடியாத அல்லது தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சாதிகள் நிறைய இருக்கிறது.

சில புலப்படாத சாதிகள் இருக்கிறார்கள். உதாரணமாக ஒபிசி பிரிவில் மாநிலத்தில் எம்.பி.சி பிரிவில் உள்ள கல் உடைப்பவர்கள், பண்டாரங்கள், ஆச்சாரிகள், இருப்பு கொல்லர்கள், தச்சர்கள் அவர்களுக்கு பெரும்பாலும் தேர்தலிலும் சீட் கொடுப்பதில்லை. எங்கேயுமே அவர்களின் பிரதிநிதித்துவம் வருவதில்லை. அதே போல, பட்டியல் இனத்தில் புதிரை வண்ணார்கள் இருக்கிறார்கள் இது போல நிறைய இருக்கிறார்கள். இவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க பிரக்ஞை பூர்வமாக செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

பட்டியல் இனத்தவர்களுக்கு முக்கிய துறைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறித்த கேள்விக்கு, அது வழக்கமானதுதான். ஆனால், இந்த முறை ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் என தலா 1 அமைச்சர் பதவி என்று கொடுத்திருக்கிறார்கள். இதில் புதிரை வண்ணார் போன்ற நிறைய சமூகங்கள் வலிமை பெற்று அவர்களுக்கான பிரந்திநிதித்துவத்தை அடைவதற்கான வாய்ப்புகளே இல்லை. அவர்களைக் கண்டறிந்து கட்சிகளும் அரசும் சிறப்பு முயற்சி செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

தேர்தல் என்பதே பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை போட்டியிடச் செய்வது என்பதாகத்தான் இருக்கிறது? இதில் எப்படி புலப்படாத சமூகங்களின் பிரநிதித்துவம் சாத்தியமாவது எப்போது?

தேர்தல் என்பதே பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை போட்டியிடச் செய்வது என்பதாகத்தான் இருக்கிறது? இதில் எப்படி புலப்படாத சமூகங்களின் பிரநிதித்துவம் சாத்தியம்?

சி.லட்சுமணன்: அதை உடைக்க வேண்டும். சமூகநீதி என்பது பெரும்பான்மை சார்ந்தது அல்ல. சமூகநீதி என்பது எல்லோருக்குமானது. சமூக கட்டமைப்பில் அடித்தட்டில் இருக்கிற மக்களுக்கு சமூகநீதி பலனை அளிக்க வேண்டும். புலப்படாத எண்ணிக்கையில் மிகவும் குறைவாக விழிப்புணர்வு இல்லாத சமூகங்கள் அமைப்பாய் திரண்டு பெரும்பான்மை தங்களின் குரல்களை ஒலிக்க இன்னும் 100 வருடம் ஆகும். அல்லது அவர்களின் அடையாளமே மாறிப்போய் வேறு ஏதாவது ஒரு சாதியில் ஐக்கியம் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது. அது ஒரு நீண்ட விவாதம்.

இரண்டாவது அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்தில் திராவிட அரசியல் தோன்றி நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பெரியாரை சாதி ஒழிப்பு போன்ற விஷயங்களில்கூட ஒருவர் விமர்சனம் செய்யலாம். ஆனால், பெரியாரின் ஆணித்தரமாம ஒரு போராட்டம் என்றால் அது பெண் விடுதலை. பெரியார் கொள்கைகளை பின்பற்றக்கூடிய ஒரு கட்சி, நூறு ஆண்டு திராவிட அரசில் பாரம்பரியத்துக்கு பிறகு, 2 பெண்களுக்குதான் அமைச்சர் பதவி கொடுக்க முடியும் என்பது நியாயம் இல்லாதது. இதற்கு எந்த விதமான சமாதானமும் சப்பைக்கட்டுகளையும் கூறக்கூடாது. கட்சி ரீதியாகவும் அரசு ரீதியாகவும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது ஜனநாயசக்திகளின் பணியாக இருக்க வேண்டும்.

4முறை 5முறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பதற்கு பதிலாக புதிதாக பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுகலாம். திமுகவில் உள்ள பெண் ஆளுமைகள் எம்.எல்.ஏ-வாக இல்லையென்றாலும் அவர்களுக்கு 6 மாத காலத்திற்கு அமைச்சரவையில் பங்கு அளிக்கலாம். அதை சுழற்சியாகக்கூட செய்யலாம். அமைச்சரவையில் 2 பெண்கள் என்பது நியாயமில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-cabinet-caste-wise-ministers-list-numerical-minority-castes-no-representation-301068/