வியாழன், 20 மே, 2021

PM Cares மூலமாக கிடைத்த இயங்காத வெண்டிலேட்டர்கள்: மோடியிடம் நேரில் அதிருப்தி

19/5/2021  இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சமடைந்துள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை மற்றும் மருத்துவ சூழல் குறித்து, திங்கள் கிழமை இந்தியாவின் முக்கிய மருத்துவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப் பெரிய மருத்துவமனையான ராஜேந்திரா இன்ஸ்ட்இடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் சார்பாக, அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவை நிர்வகிக்கும் மருத்துவர் பிரதீப் பட்டாசாரியாவும் கலந்துக் கொண்டார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தான் பணிபுரியும் ராஜேந்திரா மருத்துவமனையில் பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் பல செயலிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேசிய பிரதீப் பட்டாசாரியா, கொரோனா இரண்டாம் அலையில் தங்களது மருத்துவமனையில் எவ்வாறு மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டன என்பதையும், கொரோனா நோயாளிகளைப் பராமரிப்பதற்காக வார்டு அடிப்படையிலான ஐ.சி.யூ முறையை எவ்வாறு அறிமுகப்படுத்தினார் என்பதையும் பிரதமரிடம் விளக்கினார்.

கூட்டத்தில் பங்கேற்ற பின், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பிரதீப் பட்டாசாரியா, ‘பிரதமரின் பி.எம்.கேர்ஸ் நிதி மூலமாக எங்களது மருத்துவமனைக்கு 100 வெண்டிலேட்டர்களும், 100 அக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட்டன. முழுவதுமான இந்திய தயாரிப்புகளை எங்களுக்கு வழங்கியதற்காக பிரதமருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்தோம். இருப்பினும், பி.எம்.கேர்ஸ் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில், 45 வெண்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை என பிரதமரிடம் கூறினேன். வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பல பகுதிகளை காணவில்லை என்பதால், அவற்றை இயக்க முடியவில்லை. எண்ணிக்கை கணக்கிற்காக வழங்குவதை விட, உயர்தர தயாரிப்புகளை வழங்கிட வேண்டும் என பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான சங்கிலியை உடைப்பதில் மருத்துவ பணியாட்களின் எண்ணிக்கையும் முக்கியமான பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். எங்கள் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை விட, மூன்று மடங்கு மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுவதால், கடுமையான மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையில் உள்ளாதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பி.எம்.கேர்ஸ் நிதியின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இது வரை, ,முதல் தவணையில் 500 வெண்டிலேட்டர்களையும், இரண்டாம் கட்டமாக 750 வெண்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

source https://tamil.indianexpress.com/india/jharkhand-hospital-flags-non-functional-ventilators-it-got-under-pm-cares-304876/