07.06.2021 நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும்
21-ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்” என்று திங்கள்கிழமை கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்பட்டு வரும் சூழலில் பிரதமர் மோடி இன்று ஊடகங்களின் வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: “இந்தியாவில் இதுவரை 23 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகில் தடுப்பூசிகளை தயாரிக்கும் மிகச் சில நிறுவனங்களே உள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்?
கொரோனா தொற்று கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான தொற்றுநோயாகும். நவீன உலகம் இத்தகைய தொற்றுநோயைக் காணவில்லை. நம் நாடு இந்த தொற்றுநோயை பல மட்டங்களில் எதிர்த்துப் போராடியுள்ளது.” என்று கூறினார்.
புதிய தடுப்பூசி கொள்கை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, “தற்போது மாநிலங்களுடனான தடுப்பூசி பணிகளில் 25 சதவீதம் மத்திய அரசால் கையாளப்படும் என்றும், வரும் இரண்டு வாரங்களில் இது செயல்படுத்தப்படும் எனறும் குறிப்பிட்டுள்ள அவர், இரண்டு வாரங்களில் புதிய வழிகாட்டுதல்களின்படி மாநிலமும் மத்திய அரசும் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 21-ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்” என்று கூறினார்.
பிரதமர் மோடி தனது உரையில், வரும் நாட்களில் தடுப்பூசி வழங்கல் அதிகரிக்கும் என்றும், “இன்று நாட்டில் 7 நிறுவனங்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன என்றும், இதில் மூன்று தடுப்பூசிகளின் பரிசோதனையும் மேம்பட்ட கட்டத்தில் நடந்து வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோவிட்டுக்கு சர்வதேச தடுப்பூசி தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது என்றும் மோடி கூறினார்.