தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று, கடந்த மே 7-ம் தேதி ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த நாள் முதல், கொரோனா தடுப்பு பணிகள் முதல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய திட்டங்கள் என பலவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
2 கோடி குடும்ப அட்டைதாரரகளுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதியாக 2000,
ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு,
மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம்,
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்துக்கு புதிய துறையை உருவாக்கியது,
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனோ நோய்க்கு சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்,
மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடி தினசரி 500 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் பெற்றது,
கொரோனா தடுப்பு பணிகளை கண்காணித்திட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்,
தடுப்பூசி இறக்குமதிக்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி,
மறைந்த கரிசல் நில எழுத்தாளர் கி.ரா நினைவாக அவர் படித்த இடைச்செவல் கிராம பள்ளியை புதுப்பித்தல் மற்றும் கோவில்பட்டியில் அவருக்கு சிலை,
கொரோனா மருந்துப் பொருள்கள் தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய எடுத்த நடவடிக்கைகள்,
எழுவர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் மற்றும் பேரறிவாளனுக்கு 30 நாள் சிறை விடுப்பு,
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை,
மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை,
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டங்கள்,
செங்கல்பட்டு எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி மையத்தில் ஆய்வு மற்றும் மாநில அரசே தடுப்பூசி தயாரிக்கும் முயற்சி,
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியிறுத்தல்,
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள்,
கொரோனா தடுப்பு பணிகளுக்கு மாநில அரசுக்கு நிதி வழங்க பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தல்,
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நேரில் கள ஆய்வு மற்றும் கவச உடையுடன் கொரோனா வார்டுக்குள் செல்லுதல்,
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு தேர்வு ரத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தொடர்பான முயற்சிகள் என, பல அதிரடி அறிவிப்புகளும், திட்டங்களும் கடந்த 30 நாள்களில் செய்யப்பட்டுள்ளதாக நேற்று தமிழக அரசு தனது ஒரு மாத சாதனைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டதில் குறிப்பிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 30 நாள்கள் கடந்த நிலையில், அதிமுக வில் இருந்து ஸ்டாலின் ஆட்சி மீதான பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி மீது கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆனால், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வமோ தொடர்ந்து திமுக வின் தொடர் அதிரடி நடவடிக்கைகளுக்கு பல முறை பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து வருகிறார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலமாகியுள்ள நிலையில், அதிமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில், ‘விக்கித்து நிற்க, விழிப்பிதுங்கி தவிக்க; என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. ‘தளர்வுகளுடன் ஊரடங்கி நீட்டிப்பு என்ற திமுக வின் தொடர் அறிவிப்பு நாட்டு மக்களை நகைக்க வைக்கிறது. ஊரடங்கு தளர்வுகளில் உள்ள குளறுபடிகளால் மக்கள் குழப்பிபோய் உள்ளார்கள். அண்டை மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்யும் நிலையில், திமுக அரசாங்கம் மின்சாரத்தையே ரத்து செய்து விட்டார்கள். வெறும் அறிவிப்புகளை மட்டும் அறிவித்துக் கொண்டு, ஊரடங்கை உற்பத்தி செய்தி கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். வாக்களித்த மக்களோ திமுக தருகிற ஒவ்வொரு நாள் விடுதலையையும் நினைத்து விக்கித்து நிற்கிறார்கள் என, அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-stalin-government-30-days-of-ruling-view-of-admk-namathu-amma-311570/