நீட் தேர்வு தாக்கங்கள் குறித்த ஆராய குழு அமைத்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
நீட் தேர்வால் பாதிப்பு என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த குழு கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது.
மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதனை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கது அல்ல. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறியும் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அரசின் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இது குறித்து கரு.நாகராஜன் கூறுகையில், “நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. நீட் தொடர்பாக தெளிவாக ஆராயப்பட்டு, இதனால் யாருக்கும் பாதிப்பில்லை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில், ஆராய்ந்து தெளிவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, இதனை யாரும் எதிர்க்கவில்லை. தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் நீட் வேண்டாம் எனச் சொல்லும் ரவீந்திரநாத் கூட இக்குழுவில் உள்ளார். ஆனால், அவரும் எதிர்க்கவில்லை.
இந்த நிலையில், இந்தக் குழு நடத்திய கருத்துக் கேட்பில் 85 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கணிணியில் இருந்தே எத்தனை பேர் வேண்டுமானலும் கருத்து தெரிவிக்கலாம். ஒருவரே கூட பல முறை கருத்து தெரிவிக்கலாம். இது திமுகவின் குழுவா? தமிழக அரசின் குழுவா?
வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என ஒப்புக்கு நடிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் தேர்வு இதுதான்
இந்த வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஏழு நீதிபதிகள் ஆய்வு செய்யாமலா தீர்ப்பு வழங்கினார்கள்? இது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல்” என கரு.நாகராஜன் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை, நீட் தேர்வு பாதிப்பு குறித்தே ஆராயக் கூடாது என்கிற பாஜகவின் நீதிமன்ற வழக்கு, வன்மம் குறித்தெல்லாம் நீதிமன்றம் மூலமாகவே தீர்வு வரும் என கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-questioned-tn-govt-about-formation-of-neet-committee-318396/