சனி, 26 ஜூன், 2021

துணை காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது

 சென்னை காசிமேடு காவல்நிலையத்தில் சிறப்பு காவல்துறை பிரிவில் பணியாற்றி வந்த துணை காவல் ஆய்வாளர் 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த அந்த சிறுமியின் அம்மாவும், பெரியம்மாவும் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துணை ஆய்வாளர் சதீஷ்குமார் (32). கொரோனா ஊரடங்கின் போது அவருக்கு மாதவரம் பால் பண்ணை பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கும், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் பணியாற்றும் பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டது. அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவருக்கும் நாளடைவில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெரியம்மாவுக்கும் இடையே காதல் உறவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த சிறுமி கேள்விகள் கேட்க, துப்பாக்கியை காட்டி மிரட்டி, இதை வெளியே கூறினால் அந்த சிறுமியின் அப்பாவையும், சகோதரனையும் கொன்றுவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். ஒருவருடத்திற்கும் மேலாக இந்த உறவு நீடிக்க, இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவலர் சிறுமியிடமும் அத்துமீறி உள்ளார். பாலியல் சீண்டலுக்கு அவரை உள்ளாக்கியுள்ளார். அவரின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறி அந்த சிறுமியின் அம்மாவிற்கு ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார் சதீஷ்குமார்.

அந்த காவலர் கொடுத்த இன்னல்களை பொறுத்துக் கொள்ள இயலாத சிறுமி தன் தந்தையிடம் அனைத்தையும் கூறியுள்ளார். மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவலர், பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா மற்றும் பெரியம்மா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு சிறப்பாகப் பணியாற்றியதாக அப்போதைய காவல் ஆணையரிடம் பரிசும் பாராட்டும் சதீஷ்குமார் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minor-abused-in-chennai-sub-inspector-held-under-pocso-317378/