தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு மதிப்பெண்களை நிர்ணயம் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழு 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்புகளில் தலா 30சதவீத மதிப்பெண் மற்றும் 12ஆம் வகுப்பு பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவீதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 12ஆம் வகுப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே 12ம் வகுப்பு மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை தேர்வுத்துறை கோரிய நிலையில், அவற்றில் இருந்து அதிகளவில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அனைத்து பள்ளிகளும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வு நடத்தியுள்ளன. ஆனால், பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளி அளவிலான தேர்வு மதிப்பெண்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது சவாலாக இருக்கும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் வகுப்பு அளவிலான தேர்வு மதிப்பெண்களை உயர்த்தக்கூடும் என குழு உறுப்பினர்கள் கருதுகின்றனர். 2019-20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. பல பள்ளிகள் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்கியுள்ளன. இது பொதுத்தேர்வில் சாத்தியமில்லை.
கல்லூரிகள் மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேர மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. இதனால் சிபிஎஎஸ்இ போல் தமிழகத்திலும் மாணவர்களுக்கு +2 மதிப்பெண் கணக்கீடுவது செய்ய வாய்ப்புள்ளது என கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், கொரோனா இரண்டாவது அலை குறைந்துவிட்டதால், குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களக்கு தேர்வெழுத வாய்ப்பு வழங்குமாறு பள்ளி முதல்வர்கள் மாநில அரசை வலியுறுத்துகின்றனர்.
எந்த வகையில் அரசு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்து வழங்கினாலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொள்வது கடினம். இதனால் கொரோனா குறைந்தபின்னர் குறிப்பிட்ட மாணவர்களுக்கு தேர்வெழுத அரசு அனுமதி வழங்கவேண்டும். அவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில்தான் இருக்கும் என பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/state-board-12-th-exam-five-ways-to-evaluate-marks-317134/