தென்னிந்தியாவில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து நீண்ட காலமாக கவனித்து வந்திருந்தால் உங்களுக்கு உமா பற்றிய அறிமுகம் தேவை இல்லை என்று தான் நினைக்கின்றேன். இருப்பினும், இவருடைய வாழ்க்கை பயணம் பெண்களுக்கு பெரிய பாடமாக இருக்கும் என்பதால் ஒரு சிறிய அறிமுகம். சிறந்த ஓவியர். மாலத்தீவில் தன்னுடைய கணவருடன் வசித்து வந்த அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது Juan De Nova என்ற பிரெஞ்ச் மொழி ஆவணப்படம். அதில் காட்சிபடுத்தப்பட்ட பவளப்பாறைகளை பார்த்து அதிகம் ஈர்க்கபப்ட்ட அவர் 2010ம் ஆண்டில் இருந்து பவளப்பாறைகளுக்கு தன்னுடைய கையால் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார் உமா. ”49-வது வயதில் நான் நினைத்தும் கூட பார்க்காத நிகழ்வுகளாக நீச்சல் கற்றுக் கொண்டதும், பின்னாளில் பவளப்பாறைகளை மிக அருகில் இருந்து காண விரும்பி, ஆழ்கடல் நீச்சல் (Scuba diving) கற்றுக் கொண்டதும் அமைந்தது” என்றார் உமா.
52 நிமிடங்கள் ஓடும் ”கோரல் வுமென்” ஆவணப்படத்தில் மாசுபாடு, சட்டத்திற்கு புறம்பாக பவளப்பாறைகளை வெட்டுதல் மற்றும் தவறான கழிவுநீர் மேலாண்மையால் இந்தியாவில் பவளப்பாறை திட்டுகள் எப்படி அழிந்துள்ளது என்று காட்டியுள்ளார் படத்தின் இயக்குநர் ப்ரியா தூவஷெரி. 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட நிகழ்வுகளில் வெளியிடப்பட்டு பல விருதுகளை வாங்கியுள்ளது. இருப்பினும் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக யுடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், கடல் சூழலியல் பாதுகாப்பிற்காக உமா செய்து வரும் முக்கிய பணிகள் குறித்தும் அவரிடம் பேசியது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.
காலநிலை மாற்றத்தால் மீன்களையும், கடலையுமே நம்பி இருக்கின்ற மீனவ குடிகளின் வாழ்வாதாரத்தையும் நாம் இழந்துள்ளோம். பவளப்பாறைகள் செழிப்பானவை. பல வகையான மீன்களுக்கு உணவையும், வாழ்விடத்தையும் வழங்கும் பூகோள அமைப்பாகும். இந்தியாவில் அந்தமான் -நிக்கோபர் தீவுகள், மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் லட்சத்தீவுகளில் பவளப்பாறை திட்டுகளை காண முடியும். மாலத்தீவுகள் உள்ளிட்ட பல இடங்களில் பவளப்பாறைகளை பார்ப்பதற்காக “டைவ்” செய்த உமாவிற்கு இந்திய கடல் பகுதியில் ஏமாற்றங்களே கிடைத்தது. இதற்கான காரணங்களை தேடும் உமாவும், ஆவணப்பட இயக்குநர் ப்ரியா தூவஷெரியும் நம்மை அவர்களுடன் உடன் பயணிக்க அழைத்து செல்கின்றனர்.
இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான வேறுபாடு குறித்து உமாவிடம் கேட்ட போது, “இரு நாடுகளிலும் கடல் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் மக்கள் தொகையில் பெரிய வேறுபாடு உள்ளது. பெரும்பாலான மாலத்தீவு வாழ் மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கின்றனர். இதனால் இதர கடல்வாழ் உயிரனங்கள் அந்த தூண்டிலில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் பல்வேறு வழிகளில் மீன்களை பிடித்து வருகின்றனர். வாழ்வாதாரத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தாத வகையில், அதே நேரத்தில் கடல் சூழலியலுக்கு ஆபத்து வராத வகையில் மீன் பிடித்தல் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வுகளின் முடிவுகளுக்கும், நடைமுறையில் இருக்கும் மீன்பிடிக்கும் முறைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் போது வருங்காலத்தில் இது போன்ற மோசமான அழிவை நாம் சந்திக்க மாட்டோம் என்று நினைக்கின்றேன் என்று கூறினார்.
PADI (Professional Association of Diving Instructors) சான்று பெற்ற உமா, தன்னுடைய ஓவியங்களால் பவளப்பாறை திட்டுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மட்டும் அல்லாமல், தன்னுடைய ஓவியக் கண்காட்சி மூலம் கிடைக்கும் வருவாயில் 50%-த்தை பவளப்பாறை மீட்டளிப்பு (Restoration) பணிகளுக்காக வழங்கி வருகிறார்.
மன்னார் வளைகுடாவில் டைவ் செய்த அனுபவம் குறித்து கேட்ட போது, ”அதனை கடல் என்று சொல்ல முடியாது. ஆனால் சர்வ நிச்சயமாக சாக்கடை என்று கூறலாம். சுத்தகரிக்கப்படாத ஆலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், சாக்கடை நீர் என்று அனைத்தும் நேராக அப்படியே கடலில் சேர்கிறது. நான் சாக்கடைக்குள் ”டைவ்” செய்ததைப் போன்று தான் உணர்ந்தேன். அங்கிருந்து வெளியே வந்த பிறகு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. தமிழக கடல்பகுதிகளின் நிலைமை கண்டு மிகவும் வேதனையாக இருந்தது. கடல் சூழலியல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது” என்றார் உமா.
சமீபத்தில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம், கடலில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வான் தீவை அழிவில் இருந்து காக்கும் வகையில் செயற்கை பவளப்பாறை திட்டுகளை கடலுக்குள் வைத்துள்ளனர். அதே போன்று பல்வேறு இடங்களில் பவளப்பாறைகளுக்கான “நர்சரி” உருவாகி வருகிறது. இவையில்லாமல் பவளப்பாறை சூழலியலை காக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது அவர், கழிவு மேலாண்மை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவை அனைத்தும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள். நாம் தான் தவறானவற்றை சரிப்படுத்த வேண்டும். அதற்கு இது சரியான நேரம் என்றும் கூறினார்.
உங்களைச் சுற்றி கடலே இல்லை என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். உங்களின் தவறான / மேலோட்டமான கழிவு மேலாண்மை காரணமாக தான் இத்தனை கழிவுகளும், குப்பைகளும் நேரடியாக கடலுக்குள் கொண்டு கொட்டப்பட்டுகிறது. வீட்டில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாக்குங்கள்.. ப்ளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு பணியாளர்களிடம் கொடுங்கள். கழிவு மேலாண்மை மற்றும் சாக்கடைகளை மறுசுழற்சி செய்வது தற்போதைய அவசியங்களில் ஒன்று.
இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், நான் கடலில் டைவ் செய்த போது டூத் ப்ரஷ், ப்ளாஸ்டிக் பக்கெட் எல்லாம் கடலில் மிதந்து கொண்டிருந்த போது. என் தலைக்கு மேலே ”டையப்பர்” மிதந்து கொண்டிருந்தது. நினைத்து பாருங்கள்… கழிவு மேலாண்மை பல வகைகளில், பல சூழலியல்களை காப்பாற்றும். கடல்வாழ் உயிரினங்கள் பிழைத்திருக்கவும், நீடித்திருக்கவும் அது பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.
மேலிருந்து பார்க்கும் போது அடர்ந்த நீல நிறம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் நீரின் மேற்பரப்பை தாண்டி, உள்ளே சென்றால் காணக் கிடைப்பதெல்லாம் அழிவின் விளிம்பில், நிறங்கள் மங்கி, கடலின் உண்மையான சூழலுக்கு புறமான ஒரு மயான தோற்றம். அங்கே நிலவுவதை பார்க்கும் போது, மனிதர்களாகிய நாமும், நம்முடைய மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகளும், எப்போதும் ஏன் என்று கேள்வி கேட்காமல் பின் தொடரும் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளும் நம்முடைய புவிக்கோளத்தை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பது தெளிவானது.