
மாணவர்களின் பாடப் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை நீக்கி புதிய புத்தகம் அச்சடித்ததில், 23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கல்வி துறையின் பல்வேறு அலட்சிய போக்கால், 53 கோடி ரூபாய் வீணாகியுள்ளது என்றும் 2019-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்த தமிழக சட்டசபையில், கடந்த 2019ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக்கல்வி துறையின் இழப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை அனைத்து பாடங்களுக்கும் இலவச புத்தகம் வழங்கப்படுவதாகவும், இதற்கான தயாரிப்பு பணிகள் மற்றும் செலவுகளை, பள்ளிக்கல்வி துறை கவனிக்கிறது என்றும் குறிப்பிட்டள்ளது
மேலும் தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனரகங்கள் மற்றும் பாடநுால் கழகம் ஆகியன, புத்தக தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகளை மேற்கொள்கின்றன. புத்தகம் அச்சடிப்பை கவனிக்கும் பாடநுால் கழகம், அரசிடம் செலவு தொகையை பெறுகின்றன என்றும், கடந்த 2019- – 20ம் ஆண்டுக்கு அச்சு காகிதங்களை கையாளும் கட்டணம் எனக் கூறி, அரசாணையில் உள்ளதை விட 5 சதவீதம் கூடுதல் தொகையை, பாடநுால் கழகம் அரசிடம் கேட்டது என்றும்,. இதற்கு தணிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பாடநுால் கழகம் கைவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செலவு தொகையை நிர்ணயித்து பெற்று தரும் தொடக்க, பள்ளிக்கல்வி இயக்குனரகங்கள், இது குறித்து முந்தைய ஆண்டுகளில், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. இந்த அலட்சியத்தால், கடந்த 2016 – -17ம் நிதி ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு, அரசாணையை விட கூடுதலாக, 21.85 கோடி ரூபாயை பாடநுால் கழகம் பெற்றுள்ளது. இது, அரசுக்கு ஏற்பட்ட இழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், 2015ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, தமிழக பாடப் புத்தகத்தில் முன்னுரை மற்றும் முகவுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போது அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறி எழுதப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அந்த புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு முன்னுரை, முகவுரை மாற்றத்துக்காக 6.37 லட்சம் பிரதிகள் மீண்டும் அச்சடிக்கப்பட்டன. இந்த வகையான தேவையற்ற செலவுக்கு, 23.27 கோடி ரூபாய் வீணானது. புத்தகத்தின் அம்சங்களை சரிவர செய்யாதது பள்ளிக்கல்வி துறையின் தவறாகும்.
அதேபோல், அண்ணா நுாற்றாண்டு நுாலக கட்டடத்தை பசுமை கட்டடமாக பராமரிக்க, பல்வேறு தானியங்கி கருவி வசதிகள் செய்யப்பட்டன. இதற்கு 5.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.இதற்கு ஆண்டு பராமரிப்புக்கு, 75 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.இந்த கருவிகளை 2011 – 2015 வரை அரசு சரிவர பராமரிக்கவில்லை. ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்தையும் நீட்டிக்கவில்லை. இதனால் அந்த நவீன கருவிகள், செயல்படாமல் வீணாகி விட்டன.
மேலும், நுாலகத்தின் உயரமான கட்டடத்தை சுத்தப்படுத்தும் கருவி, தீ தடுப்பு குழாய் மற்றும் கட்டுப்பாட்டு அறை, ‘லிப்ட்’ போன்றவற்றின் பராமரிப்பையும் மேற்கொள்ளவில்லை. இந்த வகையில் பள்ளிக்கல்வி துறை மற்றும் நுாலக பொறுப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால், 7.98 கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தமாக, பள்ளிக்கல்வி துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கைகளால், அரசுக்கு 53 கோடி ரூபாய் வீண் செலவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தற்போது இணையதளஙகளில் வைரலாகி வரும் நிலையில், முன்னாள் மூதல்வர் கருணாநிதி பெயரை நீக்க இத்தனை கோடி செலவா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-update-23-crore-loss-for-karunanithi-name-remove-from-book-317349/