25 06 2021 தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் வகை 2- இல் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. என்னென்ன தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன எனபது பற்றிய விவரம் வருமாறு:
பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
- வகை 2-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள்/ செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத்தளர்வு அளிப்பதுடன் கூடுதலாகக் கீழ்கண்ட செயல்பாடுகளும் அனுமதி அளிக்கப்படுகின்றன.
- பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/வீடியோ, சலவை தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், காலை 9 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- செல்பேசி மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- சாலையோர உணவுக்கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதிக்கப்படும்.
- அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- மாவட்டங்களுக்கு இடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என வகை 1ல் குறிப்பிடப்பட்டுள்ள 11 மாவட்டங்களில் கடைகள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படவும், மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள், பாத்திர விற்பனை கடைகள், செல்போன், போட்டோ கடைகள், கணினி வன்/மென் பொருள் விற்பனை கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடனும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடனும், வங்கி, காப்பீட்டு சேவை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடனும், ஏற்றுமதி இறக்குமதிக்கு தேவையான இடுபொருட்களை வழங்கும் நிறுவனங்கள் 100% நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடனும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20% பணியாளர்களுடனும், வீட்டு வசதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடனும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படுவதாகவும், பூங்காக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சலூன்கள், அழகு நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படுவதாகவும், திறந்த வெளியில் திரைப்படம் மற்றும் சின்னதிரை படப்பிடிப்பு கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 பேர் மட்டுமே RTPCR பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source News7 TV