திங்கள், 14 ஜூன், 2021

நீட் நடத்தாவிட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு… என்ன செய்யும் திமுக அரசு?

 மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகளும், பல தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு பின்னர், அதி முக்கியத்துவம் பெற்ற அரசியல் தலையீடாக நீட் தேர்வு உருமாறியது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என அவ்வப்போது அரசு குரலெழுப்பி வந்தாலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் பெரும் பிரச்னையாக கருதப்பட்ட நீட் தேர்வுக்கு, அன்றைய எதிர்க்கட்சியான திமுக கடும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் நடத்தியது. அதிமுக அரசுக்கு திமுக கொடுத்து வந்த பெரும் அழுத்தங்களுள் நீட் தேர்வு விவகாரமும் ஒன்று. இந்த நிலையில், தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுக அரசு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அமைச்சர்கள் சிலர் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் விதமாக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

நீட் தேர்வை தமிழகத்தில் முற்றிலும் ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் பயிற்சி மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை பயிற்சி மையங்கள் செயல்படாவிட்டால், அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் சேர முடியாத சூழல் உருவாகிவிடும் என்பதால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்சியை தொடரவும் அரசு அறிவுறுத்தி உள்ளதாக தெரிய வருகிறது.

நீட் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்துவிடுவோம் என்ற திமுக, எடப்பாடி அரசால் கொண்டுவரப்பட்ட நீட் பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்தப் போகிறது. இந்த முடிவு, திமுக வின் இயலாமையையும், மக்களுக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் அளித்த பொய்யான வாக்குறுதிகளை அம்பலப்படுத்துகிறது, என அதிமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ குத்தீட்டி பகுதியில் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், எடப்பாடி அரசின் சரியான முடிவை திமுக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க, கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் ஆண்டு முழுவதும் பள்ளிகளை திறக்க விடாமல் செய்து விட்டது. தனியார் பள்ளிகளில் ஓரளவிற்கு 12-ம் வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படாததாலும், 30% என்ற அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாலும் நீட் தேர்வு நடத்தப்பட்டால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. அதே வேளையில், நீட் தேர்வுகள் நடத்தப்படாமல், மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால், தனியார் பள்ளிகள் பணத்தை பெற்று கொண்டு அதிக மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதால், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்படையும் சூழலே உருவாகி உள்ளது. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென வழங்கப்பட்ட 7.5% உள் ஒதுக்கீட்டிலும் மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இதனிடையே, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. நீட் தேர்வுக்கு மாற்றாக அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் மாணவர் சேர்க்கை குறித்தான முறைகளை இக்குழு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களை ஆராய்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய மாணவர்களின் நலனை பாதுகாத்திட தேவையான பரிந்துரைகளை இக்குழு ஒரு மாத காலத்துக்குள் வழங்கும் எனவும் தெரிய வருகிறது. மேலும், இந்த குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-neet-exam-dmk-stands-admk-government-school-students-reservation-controversy-313477/