12.06.2021 தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் உச்சநிலையில் இருந்து வந்தது. கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வந்த முதலமைச்சர் ஸ்டாலின், எப்போது டெல்லி செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், மரியாதை நிமித்தமாகவும், மாநில வளர்ச்சிக் கொள்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக வரும் 17-ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.
இருப்பினும், சந்திப்பு தொடர்பான தேதி உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையை திறந்து வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், வரும் 17-ம் தேதி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, முதலமைச்சராக பதவியேற்ற பின், ஸ்டாலினின் முதல் டெல்லி பயணம் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு என்பதால், தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரதமருடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ள நிலையில், தமிழகத்திற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன என்பது தற்போது விவாதப் பொருளாகி உள்ளது. இருப்பினும், தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, மத்திய அரசு அளிக்க வேண்டிய வரி பாக்கிகள், தமிழ்நாட்டில் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதி நிலுவைகள், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முதலமைச்சர் வலியுறுத்துவார் என தெரிய வருகிறது.
முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஒரு மாதங்களை கடந்த நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், கொரோனா சூழல் தொடர்பாகவும் பல கடிதங்களை எழுதியுள்ளார். பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பின் போது, தமிழகத்திற்கு அதிக கோவிட் தடுப்பூசிகளை பெறுவது தொடர்பாகவும், செங்கல்பட்டில் அமைந்துள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை மாநில அரசுக்கு குத்தகைக்கு அளித்தல் தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chief-minister-mk-stalin-meets-prime-minister-narendra-modi-june-17-demands-neet-vaccine-313144/