தமிழ்நாட்டில் செப்டம்பர் 15க்குள் நகர்ப்புற மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகர்ப்புற மற்றும் கிராமா உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒரு நாள் முன்னரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களிடம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காக, திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் மக்களுடன் நல்ல உறவுடன் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதைவிட ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் வொர்க் ரிப்போர்ட் கட்டாயம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின், திறமையான நிர்வாகத்தை வழங்க வேண்டியதன் அவசியத்தை எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தினார். சட்டமன்றக் கூட்டத்தொடருகான உத்தியை வகுத்தல் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு பெரிய அளவுக்கு இல்லை என்று கூறினார். இந்த குறைபாடு எதிர்கால தேர்தல்களில் சரிசெய்யப்பட வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் அவர்களுடைய பணிகள் குறித்த வொர்க்கிங் ரிப்போர்ட் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதோடு, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிக்க மூத்த தலைவர்கள் யார் யார் பதிலளிக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோபமூட்டும் வகையில் பேசினாலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைத்து அமைச்சர்களையும் அவர்களுடைய துறை சார்ந்து அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். இதேபோல், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகள் தொடர்பான தரவுகளுடன் சட்டமன்றத்திற்கு வர வேண்டும்” என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில்தான், 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் அளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏக்களிடம் பேசினார். சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிகளில் செய்த பணிகளை வொர்க்கிங் ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பது ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை பரபரப்பாக்கியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-asks-dmk-mlas-to-submit-their-work-report-of-constituency-316171/