சனி, 19 ஜூன், 2021

என்னமா ஒப்பிடுறாங்கப்பா!

முதல்வரான பின் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமருடனான சந்திப்பை ஒப்பிட்டு திமுக எம்பி தயாநிதி மாறன் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸடாலின் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். 


 இந்நிலையில், தமிழகத்தில் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து மனு அளிக்க முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட அவர்,  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனையில்,  தமிழகத்தில் வளர்ச்சி குறித்து சுமார் 60-க்கு மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் சமர்பித்தார்.

தொடர்ந்து பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடனான சந்திப்பு மனநிறைவை கொடுத்த்து என்றும்,  உண்மைக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்பும் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகப் பிரதமர் உறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.

மேலும்,  திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், கூடுதல் தடுப்பூசிகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பு குறித்து மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தனது ட்விட்டரில் பிரதமர் மோடியுடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது சந்திப்பை ஒப்பிடும் வகையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ட்விட்டர் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தயாநிதி மாறனின் இந்த ட்வீட்டை தற்போது பலரும் பகிர்ந்து செய்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-dayanidhi-maran-tweet-former-and-current-cm-photos-of-pm-modi-meet/