வியாழன், 24 ஜூன், 2021

துடிக்கத் துடிக்க தாக்கிய போலீஸ்; விவசாயி மரணம்: வீடியோ வைரல், அரசு நடவடிக்கை

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடந்த ஒரு மாதமாக மதுக்கடைகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவில் தளவு செய்யப்பட்டு மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எவ்வித தளர்வும் அறிவிக்கப்படாத நிலையில், மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களின் பட்டியலில் சேலம் மாவட்டம் இணைந்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில், மதுக்கடைகள் தடை செய்ப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன்  என்பவர் மதுவாங்குவதற்காக கல்வராயன் மலை வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அந்த வழியாக வந்த முருகேசன் மற்றும் அவரது நன்பர்கள் இருவரை மடக்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முருகேசனுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில்,  முருகேசனை காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி சராமாரியாக லத்தியால் தாக்கியுள்ளார். இதன் காரணமாக தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்று காலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து,முருகேசனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்த நிலையில்,  இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக .அவரிடம் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி,குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சட்டசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வர், என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன் *தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும் என்றும், நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-farmer-death-for-police-attack-in-selam-district-316547/