ஞாயிறு, 20 ஜூன், 2021

கிராபென் பயன்படுத்தி கொரோனா வைரஸை விரைவாக கண்டறியலாம்; புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

 இல்லினாய்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தின் (ஐ.யு.ஐ.சி) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வக சோதனைகளில் கிராபெனை (graphene) பயன்படுத்தி SARS-CoV-2 கொரோனா வைரஸைக் கண்டறிதலில் வெற்றிகண்டுள்ளனர்.

சோதனைகளில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு தபால்தலையை விட 1,000 மடங்கு மெல்லிய கிராபென் தாள்களை, கொரோனா வைரஸில் உள்ள ஸ்பைக் புரதத்தை குறிவைக்க வடிவமைக்கப்பட்ட ஆன்டிபாடிகளுடன் ஒன்றிணைத்தனர். செயற்கை உமிழ்நீரில் கோவிட்-நேர்மறை மற்றும் கோவிட்-எதிர்மறை மாதிரிகள் வெளிப்படும் போது இந்த கிராபெனின் தாள்களின் அணு-நிலை அதிர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் அளந்தனர். இந்த தாள்கள் MERS-CoV போன்ற பிற கொரோனா வைரஸ்கள் முன்னிலையிலும் சோதிக்கப்பட்டன.

கோவிட்-பாசிட்டிவ் மாதிரியுடன் சோதனை செய்யும்போது ஆன்டிபாடி-இணைந்த கிராபெனின் தாளின் அதிர்வுகள் மாறிவிட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதேநேரம், கோவிட்-எதிர்மறை மாதிரியுடன் அல்லது பிற கொரோனா வைரஸ்களுடன் சோதனை செய்யும்போது கிராபென் தாளின் அதிர்வுகளில் மாற்றமில்லை என்பதையும் கண்டறிந்தனர்.

ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டர் எனப்படும் சாதனத்துடன் அளவிடப்படும் அதிர்வு மாற்றங்கள் ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே தெளிவாகத் தெரிந்தன.

ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் பத்திரிகை ஏ.சி.எஸ் நானோவில் வெளியிடப்பட்டுள்ளன.

“கோவிட் மற்றும் அதன் மாறுபாடுகளை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிவதற்கான சிறந்த வழிகள் நமக்கு தேவையாக உள்ளது. மேலும் இந்த ஆராய்ச்சிக்கு கொரோனா கண்டறிதலில் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது” என்று ஆய்வின் மூத்த எழுத்தாளர் பேராசிரியர் விகாஸ் பெர்ரி கூறியவற்றை  யுஐசி வலைத்தளம் மேற்கோள் காட்டியுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/test-using-graphene-shown-to-detect-coronavirus-in-lab-315276/