கல்வி தொலைக்காட்சி அட்டவணையை மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகள் தடையில்லாமல் கிடைப்பதற்காக கல்வி தொலைக்காட்சி சேனலில் வகுப்பு வாரியாகவும், பாடவாரியாகவும், கற்றல்- கற்பித்தல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கல்வித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பாடங்கள் வகுப்பு வாரியாக ஒளிப்பரப்படும். அன்று ஒளிப்பரப்பான பாடங்களின் மறு ஒளிப்பரப்பு இரவு 10.30 மணி முதல் காலை 5.30 மணி வரை ஒளிப்பரப்படும்.
கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் அட்டவணையை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். இந்த அட்டவணை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் மூலம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதாவது, கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் மற்றும் ஒளிப்பரப்பு நேரம் பற்றிய கால அட்டவணையை வாட்ஸ் அப் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ் அப் பயன்பாடு இல்லாத பெற்றோர்களுக்கு, பாடப்புத்தகங்களை வாங்க வரும்போது கல்வித் தொலைக்காட்சி அட்டவணையின் நகலை வழங்க வேண்டும்.
மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தொலைகாட்சி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளி ஆசிரியரின் தொலைப்பேசி எண்களை மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடங்களுக்கு உரிய பயிற்சி வினாக்களை பெற்றோர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ் அப் பயன்பாடு இல்லாத பெற்றோரை பள்ளிக்கு நேரடியாக அழைத்து பயிற்சி வினாக்களை கொடுத்தனுப்ப வேண்டும்.
விடைத்தாள்களை மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் பெற்று, திருத்தி மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு பயிற்சி என்ற அடிப்படையில் இதனைச் செய்ய வேண்டும்.
நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் வரையிலும் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்களைக் கணக்கிட்டு, அந்த மாணவர்களுக்கும் உரிய கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த பாடங்களை தவறவிட்ட மாணவர்கள் அல்லது மீண்டும் பார்க்க விரும்பும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் இணைய தளத்தின் மூலமாகவும், கல்வித் தொலைக்காட்சி யூடியூப் சேனல் மூலமாகவும், கற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் (அரசு கேபிள் டிவி சேனல் எண் 200) நாள் முழுவதும் வகுப்பு வாரியாக பாடங்கள் சார்ந்த வீடியோக்கள் ஒளிப்பரப்படும். இது தவிர புதுயுகம், ராஜ் டிவி, வசந்த் டிவி, கேப்டன் நியூஸ், சத்தியம் டிவி, லோட்டஸ், மதிமுகம், மக்கள் தொலைக்காட்சி, எஸ்சிவி கல்வி ஆகிய சேனல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மறு ஒளிப்பரப்பு செய்யப்படும். ஒளிப்பரப்பாகும் நேரம் மற்றும் பாடங்கள் சார்ந்த அட்டவணை பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/commissioner-order-to-teachers-should-inform-parents-about-education-tv-schedule-316501/