வியாழன், 17 ஜூன், 2021

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க காரணம் என்ன?

 Monsoon

கேரளாவில் பருவமழை துவங்கும் என்று கூறிய தேதியில் இருந்து 2 நாட்கள் கழித்து துவங்கிய தென்மேற்கு பருவமழை 10 நாட்களில் நாட்டின் மூன்றில் இரண்டு பகுதியில் பரவியுள்ளது.

தற்போதைய பருவமழை நிலை என்ன?

செவ்வாய்க்கிழமை அன்று என்.எல்.எம். டையூ, சூரத், நந்துர்பார், போபால், நகௌன், ஹமிர்பூர், பாராபங்கி, பரேலி, ஷரான்பூர், அம்பளா மற்றும் அமிர்தசரஸ் போன்ற பகுதிகளுக்கு பருவமழை முன்னேறியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த நாளைக் காட்டிலும் 10 நாட்கள் முன்கூட்டியே பெய்ய துவங்கியுள்ளது. ராஜஸ்தான், குஜராத், மேற்கு மத்தியபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி போன்ற வடமேற்கு இந்தியாவில் இன்னும் பருவமழை துவங்கவில்லை. மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை தவிர, ஜம்மு காஷ்மீர், லடாக், குஜராத், மற்றும் கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பெய்த மழையின் அளவானது 20% முதல் 59% வரை, இயல்பைக் காட்டிலும் அதிகமானது.

இந்த ஆண்டில் முன்கூட்டிய பருவமழை துவங்க காரணம் என்ன?

மே மூன்றாவது வாரத்தில் வங்காள விரிகுடாவில் உருவான யாஸ் புயல், மே 21ம் தேதி அன்று பருவமழை அந்தமானில் துவங்க உதவியது. கேரளத்தில் வழக்கத்தைக் காட்டிலும் இரண்டு நாள் தாமதமாக, ஜூன் மூன்றாம் தேதி அன்று பருவமழை துவங்கி, தொடர்ந்து வந்த நாட்களில் தீவிரம் அடைந்தது. அரபிக் கடலில் இருந்து பலத்த காற்று வீசுவதன் காரணமாக இது சாத்தியமானது. மேலும் இது வடக்கு வங்கக் கடலில் ஜூன் 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக காரணமாக அமைந்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நிலை கொண்டுள்ளது.

தீவிரம் அடைந்த பருவமழை தற்போது வடகிழக்கு, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் , பீகார் மற்றும் சத்தீஸ்கரின் சில பகுதிகளில் முன்னேறியுள்ளது. மகாராஷ்டிராவிற்கும் கேரளாவிற்கும் இடையில் ஒரு வாரமாக நிலவும் ஒரு கரையோர காலநிலை கர்நாடகா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் பருவமழையை தீவிரப்படுத்தியது.

இது அசாதாரணமானதா?

கடந்த 10 ஆண்டுகளில் 2020 (ஜூன் 1-26), 2018 (மே 28-ஜூன் 29), 2015 (ஜூன் 5- 26) மற்றும் 2013 (ஜூன் 1 -1 6) காலப் பகுதிகளில் பருவமழை மொத்த இந்தியாவையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. மற்ற ஏழு ஆண்டுகளில், முக்கிய நகரங்கள் அல்லது பிராந்தியங்களில் பருவமழை துவக்கம் தாமதமானது. 2019 ஆண்டில் வாயு புயலும், 2017 ஆண்டில் மோரா புயலும் பருவமழை முன்னேற்றத்தை சில நாட்கள் தாமதப்படுத்தியது. ஆனால் ஒட்டுமொத்தமாக, இந்த ஏழு ஆண்டுகளில் முன்னேற்றம் சாதாரணமாக இருந்தது. பருவமழை ஜூலை 15ல் நாட்டில் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது. பருவமழை முன்கூட்டியே துவங்கிய காலத்தில், அதன் முன்னேற்றம் இறுதி கட்டத்தில் அதிகரித்தது. வடக்கு வழக்கு மாநிலங்கள் முன்கூட்டியே பருவமழைப் பொழிவை கண்டன.

இதே வேகம் தொடருமா?

மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள் மற்றும் கிழக்கு, வடகிழக்கு மற்றும் சில மத்திய இந்தியா பிராந்தியங்களில் பருவமழை விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், மேலும் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். ஜூன் 25 வரை மேற்கொண்ட முன்னேற்றத்திற்கு வாய்ப்பு இல்லை.

வடமேற்கு இந்தியாவில், அரபிக் கடல் அல்லது வங்காள விரிகுடாவிலிருந்து – பருவமழை நீரோட்டங்கள் இப்பகுதியை அடையும் போது மட்டுமே பருவமழை செயல்படுகிறது. இது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படாததால், பருவமழை முன்னேற்றம் மெதுவாகவே இருக்கும் ”என்று ஐஎம்டியின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுன் ஜெய் மொஹாபத்ரா கூறினார்.

வடமேற்கு இந்தியாவை நெருங்கிய அட்சரேகை மேற்கு காற்றின் நீரோடை நெருங்கி வருகிறது, இது பருவமழையின் முன்னேற்றத்தை தடுக்கும்.

முன்கூட்டிய பருவமழை அதிக மழைப்பொழிவுக்கான அறிகுறியா?

முன்கூட்டிய பருவமழை நேரடியாக மழைப்பொழிவிலோ அல்லது பருவமழையின் முன்னேற்றத்திலோ தாக்கத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக, பருவமழை 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் 42 நாட்கள் மற்றும் 22 நாட்கள் முறையே நாடு முழுவதும் மழைப் பொழிவை ஏற்படுத்தியது. இத்தகைய தனித்துவமான வரம்புகளுடன் கூட, இந்தியா இரண்டு ஆண்டுகளிலும் குறைவான மழையைப் பதிவு செய்தது.

இந்த மாத இறுதியில் மழைப் பொழிவு மொத்த நாட்டையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஆரம்பத்தில் எதுவும் கூற முடியாது. இருப்பினும் ஜூன் மாத மழைப் பொழிவு 170மி.மீ உபரி மழையில் நிறைவடையும். ஜூன் 15 வரை, சாதாரண மழைப் பொழிவைக் காட்டிலும் 31% கூடுதலாக மழைப் பதிவாகியுள்ளது.

முன்கூட்டிய பருவமழை, விதைப்பில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

முன்கூட்டிய பருவமழை விதை விதைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அனைத்து பயிர்களும் முளைவிடும் தருவாயில் தான் இருக்கும். நெல் விளையும் பகுதிகளில், நாற்று நடவுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. கர்நாடகா மற்றும் கொங்கன் பகுதிகளில் பெற்ற மழைப் பொழிவின் காரணமாக அப்பகுதி விவசாயிகள் நாற்று நடவை ஜூன் மூன்று முதல் நான்காவது வாரங்களில் துவங்கலாம் என்று ஐஎம்டியின் வேளாண் வானிலை ஆய்வு பிரிவைச் சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். நடவு தற்போது கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய மகாராஷ்ட்ரா (கோலாப்பூர், சத்தரா மற்றும் சங்கிலி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் தவிர்த்து) மற்றும் மராத்வாடா (விதர்பா மாவட்டத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களை தவிர்த்து) விவசாயிகள், போதுமான மழைப் பொழிவை பெற்றதும் நாற்று நடவை துவங்கலாம் என்று கூறியுள்ளார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பயிர்கள் இன்னும் நடவுக்கு தயாராகவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

முன்கூட்டிய பருவமழை, குறைவான கோடை காலம் – இது அசாதாரணமானதா?

இந்தியாவில் பருவமழை ஜூன் 1-ல் துவங்கும் என்று ஐ.எம்.டி. அறிவித்திருந்தாலும் கூட, வடமேற்கு இந்தியாவில் இன்னும் கோடை காலம் முடியவில்லை. மேற்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பதிவாகும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாகவே உள்ளது. கிழக்கு உபியில் ஃபடேஹ்கர் பகுதியில் 42.4 டிகிரி செல்சியஸ் திங்கள் கிழமை அன்று பதிவானது.

சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை சூழல்கள் உருவானது. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் குறைந்த அழுத்தம் வலுவிழக்கும் போது, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்க கூடுமென்று புனேவின் ஐஎம்டியில் காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகளின் தலைவர் டி.சிவானந்த பாய் தெரிவித்தார்.

இந்த வடிவங்களை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் இணைக்க முடியுமா?

கேரளாவில் பருவமழை தொடங்கிய பின்னர், கடல்-வளிமண்டல நிலைமைகளின் அடிப்படையில் அதன் முன்னேற்றம் விரைவாகவோ, சீராகவோ அல்லது மெதுவாகவோ இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்குவது எதிர்பார்க்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவோ, தாமதமாகவோ அல்லது குறிப்பிட்டப்பட்ட நாளிலோ துவங்கும். இந்த மாறுபாடுகள் பொதுவாக மழைக்காலத்தின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு சாதாரணமாகக் கருதப்படுகின்றன. ஒரே பகுதியில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு மற்றும் மிக குறைந்த காலங்களில் மட்டுமே பெய்யும் மழைப் பொழிவு, நீண்ட நாட்களுக்கு ஏற்படும் மழைப் பொழிவு போன்றவற்றை காலநிலை மாற்றத்துடன் ஆராய்ச்சியாளர்கள் தொடர்புப்படுத்தியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/explained/why-the-southwest-monsoon-is-early-314335/