தமிழக முதல்வர் முக ஸ்டாலினை பாமக எம்.எல்.ஏக்கள், சந்தித்து கடிதம் கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 21ம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தொடரின் முதல்நாளில் ஆளுநர் உரை 52 நிமிடங்களுக்கு நடைபெற்றது.
பிறகு அங்குள்ள முதல்வர் அறையில் முக ஸ்டாலினை, பாமக சட்டப்பேரவைத் தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், சி. சிவக்குமார், எஸ். சதாசிவம் மற்றும் ஆர். அருள் ஆகியோருடன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த சந்திப்பு?
சமீப காலங்களில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து நிறை குறை என பொதுவாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவருடைய மகனும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் திடீரென அதிமுகவை சீண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவிக்க கூட்டணி கட்சிகளுக்குள் ஒரு வித பூசல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு பதில் கூறிய அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டே அனுப்பிவிட்டது அதிமுக தலைமை. இன்னிலையில் நடைபெற்ற பாமக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு, பாமக அணி மாறுமோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
52 நிமிடம்; மேசையை தட்டும் சத்தம் இல்லாமல் நடைபெற்ற முதல் ஆளுநர் உரை
ஆனால் விவகாரம் அதைப் பற்றியதல்ல, தேர்தலுக்கு முன்பு வன்னியர் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது பாமக. ஆனால் தனி இடஒதுக்கீட்டிற்கு வாய்ப்பில்லை என்பதால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் 10.5% உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது அதிமுக அரசு. தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அதிமுக அரசு தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றியது. 40 ஆண்டு கால உழைப்பு மற்றும் தியாகத்தின் பயன் இது என்று பாமக தலைவர்கள் இச்சட்டத்தை வரவேற்றனர்.
ஆனாலும், அது தற்காலிகமானது தான் என்றும், 6 மாதங்களுக்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்ற பிறகு இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு எட்டப்படும் என்று அன்றைய துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார். இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுகீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏக்கள் முக ஸ்டாலினை வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக விரைவாக முடிவு எட்டப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-session-why-pmk-mlas-met-chief-minister-mk-stalin-315995/