செவ்வாய், 22 ஜூன், 2021

நெட்டிசன்கள் ரியாக்ஷன்!


21.06.2021 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா குழுவில் சமூக நீதி எங்கே என்று கேள்வி எழுப்பிய பாஜக எம்.எல்.ஏ-வுக்கு திமுக ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் திவிரமாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாடு 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் தனது உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா, அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரெஸ், டாக்டர் எஸ் நாராயணன் ஆகிய 5 பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லா, அபிஜீத் பானர்ஜி போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகளை பாஜக அரசு நிராகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இவர்களின் ஆலோசனைகளைப் பெற குழு அமைத்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்க தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை திமுகவினரும் திமுக அரசு ஆதரவாளர்களும் ஆளுநர் உரையின் முக்கிய அம்சம் என்று பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால்,பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில்
சமூக நீதி எங்கே என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

இதற்கு திமுக ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் தீவிரமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.

வானதி சீனிவாசன் கேள்விக்கு நெட்டிசன் ஒருவர், “மூவர் பிராமணர்கள். அதுதானே உங்கள் கருத்து?

  1. அவர்கள் ஆலோசனை தருபவர்கள் மட்டுமே. மு.க.ஸ்டாலின், பி.டி.ஆர்., ஜெயரஞ்சன் ஆகியோரே அமுல் படுத்துவார்கள்.
    2.தான் பிராமணர் என்ற வெற்று ஜம்பம் கொண்டவர்கள் அல்ல இந்த மூவரும். திமுக விற்கு வாக்களித்த பிராமணர்களும் உண்டு.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன், “பொருளாதார அறிஞர் ஒய்.ஜி.மதுவந்தியை சேர்க்காம விட்டுட்டாங்க…” என்று பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக எதிர்வினையாற்றியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-mla-vanathi-srinivasan-asks-where-is-social-justice-in-economist-team-of-raghuram-rajan-to-advice-cm-mk-stalin-315931/