திங்கள், 28 ஜூன், 2021

உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

 வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை பார் கவுன்சில் வளாகத்தில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி,  “தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவாது. கொரோனா 2ம் அலையைக் கட்டுப்படுத்த நாம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விழிப்புணர்வை உண்டாக்கி நோய்த்தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 

திமுக எம்.எல்.ஏ உதயநிதி பேசுகையில், “நான் தலைமை நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் வைக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் அவர் சென்றுவிட்டார். அதனால் இங்குள்ள பிற நீதிபதிகளிடம் கோரிக்கையை முன்வைக்கிறேன். தமிழ்நாட்டிற்கு 11 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசு 1.46 கோடி தடுப்பூசிகளை மட்டுமே வழங்கி உள்ளது” என்றார்.

மேலும், “அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசை சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும்.தமிழ்நாட்டுக்கு விரைந்து தடுப்பூசி கிடைக்க, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உதவி செய்ய வேண்டும்”  என வலியுறுத்தினார். 

source https://news7tamil.live/covid-vaccine-udhayanithi-stalin-urgue-to-chennai-high-court.html