செவ்வாய், 15 ஜூன், 2021

அந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை

 coronavirus, covid cases, covid reports

கடந்த சில வாரங்களாகவே மேற்கு மற்றும் மத்திய தமிழக மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. திங்கள் கிழமை அன்று 12,772 நபர்களுக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில் அதில் 50%க்கும் மேற்பட்டோர் இந்த 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மொத்தமாக நேற்று இந்த 11 மாவட்டங்களில் 6496 வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவையில் 1728 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பதிவான 828 வழக்குகளைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமானது. பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் 100க்கும் குறைவாக வழக்குகள் பதிவாகியுள்ளது. 10 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாக உள்ளது.

தென்காசி மற்றும் கரூர் மாவட்டங்களில் நேற்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. மொத்தமாக நேற்று கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 254 ஆகும். நேற்று 25561 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 1.36 லட்சம் நபர்கள் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 11 மாவட்டங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 69,100 ஆகும். இந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையை குறைக்க சிறப்பு ஏற்பாடுகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் படுக்கை வசதிகள் அதிக எண்ணிக்கையில் தற்போது கையிருப்பு உள்ளது. கிண்டியில் மட்டும் 650 படுக்கைகளில் 380 காலியாக உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் தொற்று குறையும் விகிதமும் ஒரு சீராக இல்லை. 20 நாட்களுக்கு முன்பு சென்னையில் 5000க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆனால் தற்போது அது 1000க்கும் குறைவாக உள்ளது. ஆனால் அதே சமயத்தில் கோவையில் 20 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 இருந்தது. ஆனால் தற்போதும் பாதிப்பு எண்ணிக்கை 1500க்கும் மேல் உள்ளது. ஈரோட்டில் இந்த 20 நாட்களில் கொரோனா குறையும் வீதம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. கரூரில் நேற்று ஒரே நாளில் 125 நபர்களுக்கு கொரோனா பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்புகள் ஏதும் இல்லை. தொற்று குறைவாக இருக்கின்ற பட்சத்திலும் தளர்வுகளை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்வதால், தளர்வுகள் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க உதவலாம் என்று கருதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-coronavirus-report-over-50-per-cent-cases-recorded-in-11-districts-313954/