பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறித்து ஆராய டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்றும் இதுபோன்ற சூழ்நிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கோரிக்கைகள் வந்ததையடுத்து இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி டி.முருகேசன் தலைமையில் 10 பேர் கொண்ட ஆணைக்குழுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தக் குழுவில் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு பள்ளிகளில் இருந்து பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், மீன்வளம் மற்றும் சட்டப்படிப்பு போன்ற படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், தகுந்த தீர்வு நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும்.
இந்த குழு அரசாங்க பள்ளி மாணவர்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் ஏதேனும் இருந்தால் மற்றும் கடந்த காலங்களில் தொழில்முறை படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் உண்மையான சேர்க்கை உள்ளிட்ட காரணிகளை முழுமையாக ஆய்வு செய்யும்.
2020-21 கல்வியாண்டில் இருந்து, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
மேலும் நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராயவும், ஏற்கனவே நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tn-sets-up-commission-to-study-enrollment-ratio-of-govt-school-students-in-professional-courses-314502/