சனி, 19 ஜூன், 2021

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா: 92% பேருக்கு தடுப்பூசிக்கு பிறகு ஏற்பட்ட தொற்றில் தாக்கம் குறைவு

 92% of fully vaccinated HCWs who got Covid had mild infections : கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மீண்டும் உறுதியளிக்கும் வகையில் ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. கோவிட் 19 தடுப்பூசி பெற்றுக் கொண்ட 92% சுகாதாரப் பணியாளர்களில் பலருக்கு தடுப்பூசிக்கு பிறகு தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது என்றும், பலர் தங்களின் வீடுகளிலேயே தொற்றில் இருந்து முற்றிலும் குணம் அடைந்துவிட்டனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

தடுப்பூசிகளின் பங்கு மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்றின் தீவிரத்தை புரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள், தடுப்பூசி தயக்கத்தை நிவர்த்தி செய்கின்றன மற்றும் தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதைகளையும் அகற்றுகின்றன. கொரோனா தடுப்பூசிக்கு பிறகான கோவிட் தொற்றின் போது, முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 1% நபர்களுக்கு மட்டுமே ஐ.சி.யு மற்றும் செயற்கை சுவாசம் போன்ற கூடுதல் மருத்துவ உதவி தேவைப்பட்டது. இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் மே மாதத்திற்கு இடையேயான காலகட்டத்தில் 16,000 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டனர். இந்த காலகட்டம் இரண்டாவது அலையின் உச்சத்தை உள்ளடக்கியது, இதில் இந்தியா ஒவ்வொரு நாளும் 3.5 முதல் 4 லட்சம் வழக்குகளை பதிவு செய்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் விரைவில் மீள அவர்கள் இந்த சூழலில் தான் சுகாதாரப் பணியாளர்கள் இடைவெளியின்றி பணியாற்றினார்கள். இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகள் செயல்திறன் மிக்கவை மேலும் கொரோனா வைரஸுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை தருகிறது.

ஆய்வின் முக்கிய முடிவுகள்

முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளை பெற்ற முன்கள பணியாளர்களில் (16000) 92% பேர் மோசமான அறிகுறிகளை எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவும் தேவைப்படவில்லை. இறப்புகள் பதிவாகவில்லை. தடுப்பூசிகளை பெற்ற சுகாதாரப் பணியாளர்களில் வெறும் 6% மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முழுமையாக தடுப்பூசி போட்டபின் பாதிக்கப்பட்டவர்களில், 92 சதவீதம் பேர் லேசான நோயால் பாதிக்கப்பட்டனர். 7% பேருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்பட்டது. 1% மட்டுமே கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி போடுவதன் மூலம் ஏற்படும் இதர நன்மைகள் என்ன என்பதையும் இந்த ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தொற்று ஏற்படுதல் மற்றும் கடுமையான தாக்குதலை குறைப்பதோடு, மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயத்தையும் இது குறிக்கிறது. இதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கிறது. பொது சுகாதார இங்கிலாந்து (PHE) மேற்கொண்ட புதிய ஆய்வில், கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு அளவு (ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி) வீட்டுப் பரவலை 50 சதவீதம் வரை குறைக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் பிஷ்னு பனிக்ரஹி இது குறித்து தெரிவிக்கும் போது, “இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள், அதிக கொரோனா தொற்று அபாயத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது என்பதை இந்த ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது. இந்தியா அதன் வசம் தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தாலும், உண்மையில் அனைவருக்கும் தடுப்பூசி சென்று செல்வதற்கு விரிவான மற்றும் பலதரப்பட்ட வெகுஜன கல்வி உத்தி தேவைப்படுகிறது. வதந்திகள், கட்டுக்கதைகள் மற்றும் தடுப்பூசி போடுவதில் மக்கள் மத்தியில் தயக்கம் ஆகியவற்றை உடைக்க, ராய்ச்சி மற்றும் ஆய்வு முடிவுகளை பல்வேறு வழிகளில் மற்றும் ஸ்மார்ட் தரவு பகுப்பாய்வுகளில் பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உண்மையான தகவல்கள் அனைத்து குடிமகனுக்கும் சென்று சேரவும் ஆதாரங்கள் அதிக அளவில் உதவுகின்றன. வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் இரண்டையும் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

14 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸுக்குப் பிறகு, நோய்த்தொற்று 1.6% ஆக இருந்தது என்று பிஜிஐ ஆய்வு கூறுகிறது. பி.ஜி.ஐ. கல்வி நிறுவனத்தின் பொதுசுகாதாரம் பள்ளி மற்றும் சமூக மருத்துவ பேராசிரியர் பி.வி.எம். லட்சுமி, இரண்டு மருத்துவர்களுடன் இணைந்து, அந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட முன்களப் பணியாளர்களில் தொற்று பரவும் விதம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதன் முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசனில் வெளியானது.

அதில் இருக்கும் தரவுகளின் படி 12,248 சுகாதாரப் பணியாளர்களில் 7170 பேர் முதல் டோஸை பெற்றுக் கொண்டனர். 3650 நபர்கள் அரசின் வழிகாட்டுதல்களின் படி இரண்டாம் டோஸை பெற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் 5078 நபர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை. கொரோனா தடுப்பூசி திட்டம் கொண்டு வந்த பிறகு 506 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் டோஸ் பெற்றுக் கொண்ட 7170 நபர்களில் 184 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது முதல் டோஸ் பெற்றதுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதற்கும் இடையேயான காலம் 44 நாட்களாக இருந்தது. இரண்டாம் டோஸையும் பெற்றுக் கொண்ட 3650 நபர்களில் 72 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இரண்டாம் டோஸ்க்கும் கொரொனா தொற்று பாஸிட்டிவிற்கும் இடையேயான காலம் 20 நாட்களாக இருந்தது.

இது ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளாகும். அப்போது பிறழ்வு வைரஸ்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் தற்போது 70-75% சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ள மற்றொரு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தேவைப்படுகிறது. மேலும் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நோய்த்தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான அவ்வப்போது ஆய்வுகள் செய்ய வேண்டும். தற்போது, பஞ்சாப், ஒரு மாநிலமாக, தடுப்பூசி தரவுகளை மேலும் புரிந்து கொள்ள முயலுகிறது ”என்கிறார் பேராசிரியர் லட்சுமி.

source https://tamil.indianexpress.com/india/92-per-cent-of-fully-vaccinated-hcws-who-got-covid-had-mild-infections-314941/