துஷன்பேவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், உறுப்பு நாடுகல் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசஃப் ஆகியோர் பங்கேற்றனர். சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம்”, பிரிவினைவாதம் மற்றும் மத தீவிரவாதம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டாக போராட்டத்தில் பங்கேற இருநாட்டு ஆலோசகர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக, இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்திய தஜிகிஸ்தான் புதன்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவி வரும் ராணுவ மற்றும் அரசியல் நிலைமைகளுக்கும், அதிகரித்து வரும் ஆபத்து குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. இருநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களும் தஜிகிஸ்தான் நாட்டு அதிபர் எமோமாலி ரஹ்மோனை சந்தித்தாகவும் அந்த செய்தி அறிக்கை அறிவித்துள்ளது. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு கவுன்சில்களின் செயலாளர்களின் 16 வது கூட்டமாகும்.
எஸ்.சி.ஓவின் தற்போதைய தலைவரான தஜிகிஸ்தான் அதிபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது தஜிகிஸ்தான் என்று கூறியுள்ளார். சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம், மத தீவிரவாதம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் ஒத்துழைப்பு, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் அபாயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான ராட்ஸ் (Regional Anti-Terrorist Structure (RATS)) பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நவீன உலகின் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்ப்பதில் எஸ்.சி.ஒ உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அது கூறியுள்ளது.
கூட்டத்தில் நம்பகமான தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, சைபர் கிரைமுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பின்னணியில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தோவல், யூசஃப் மட்டுமின்றி இந்த கூட்டத்தில் கஜகஸ்தானின் அஸ்ஸத் இசெக்கெசாவ், கிரிக் குடியரசின் மராட் இமான்குலோவ், ரஷ்யாவின் நிக்கோலாய் பத்ருஷேவ், தஜிகிஸ்தானின் சஸ்ருல்லோ முகமதுஸோடா, உஸ்பெகிஸ்தானின் போபு உஸ்மானோவ், ராட்ஸ் இயக்குநர் ஜுமாகோன் ஜியோஸோவ் ஆகியோர் பங்கேற்றனர். சீனாவின் பிரதிநிதி இந்த கூட்டத்தில் பங்கேறவில்லை என்று தஜிக் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஷ்யாவின் செய்தி நிறுவனமான டாஸ் (TASS) படி, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் பத்ருஷேவ் மற்றும் தோவல், இருநாடுகளுக்கும் இடையேயான பாதுப்பு நிலைகள் குறித்தும் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் சட்ட முகமைகளின் ஒத்துழைப்பு குறித்து பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா – பசிஃபிக் பகுதிகளில் நிலவி வரும் சூழல் குறித்து இருநாட்டு அரசுகளும் செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த செய்திக் குறிப்பு அறிவித்துள்ளது.
தோவல் மற்றும் யூசஃப் சந்திப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இருநாட்டு அதிகாரிகளும் ஆப்கானில் நிலவும் சூழல் மற்றும் லைன் ஆஃப் கண்ட்ரோல் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் அமைதி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/doval-pakistan-nsa-agree-to-cooperate-in-sco-fight-against-terrorism-316781/