வியாழன், 24 ஜூன், 2021

கவலையளிக்கும் டெல்டா ப்ளஸ் வகை கொரோனா வைரஸ் : மூன்று மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

 23 06 2021 டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் டெல்டா பிளஸ் வைரஸ் மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் இது மிகவும் கவலையளிக்கக்கூடிய மாறுபாடு எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த மூன்று மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான INSACOG க்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடர்ந்து டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக்கூடிய தன்மை மற்றும் பிற பொருள் எதிரிகளின் எதிர்வினையை குறைக்கும் தன்மையை இந்த வைரஸ் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் மாறுபாடு அல்லது B.1.617.2.1 என்பது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா மாறுபாடுடன் நெருங்கிய தொடர்புடையது. டெல்டாவைப் போலவே, டெல்டா பிளஸ் மாறுபாடும் ஆர்.என்.ஏ வைரஸின் ஸ்பைக் புரதப் பகுதியில் பிறழ்வைக் கொண்டுள்ளது. இது அதிக அளவில் பரவக்கூடியதாக ஆக்குகிறது.

செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் மாறுபாடு 6 மாவட்டங்களில் 22 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவில் பாலக்காடு மற்றும் பத்தினம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப்பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் மாறுபாடு இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜபான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளது.

மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறியப்பட்டு மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளை அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக INSACOG அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் போதுமான அளவு மாதிரிகளை முறையாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், பரிசோதனைகளை அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும், கொரோனா முந்தைய அலைகளின் போது செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மூன்று மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/delta-plus-is-now-variant-of-concern-three-states-told-to-keep-a-watch-316437/