Rajya Sabha By Election Update Tamilnadu : மாநிலங்களவையில் காலியாக உள்ள தமிழகத்திற்காக 3 இடங்களுக்கு இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த 3 இடங்களையும் கைப்பற்றும் முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது.
மாநிலங்களவையில் எம்பியாக இருந்த அதிமுகவை சேர்ந்த ஏ முகமது ஜான் மார்ச் 23 அன்று மரணமடைந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி மற்றும் ஆர் வைதிலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் தற்போது மாநிலங்களாவையில் தமிழகத்திற்கான மூன்று இடங்கள் காலியாக உள்ளது.
இந்த காலி இடங்களுக்காக இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில், இந்த இடைத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று தி.மு.க. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக திமுக அளித்த கோரிக்கை மனுவில், தேர்தலின் தாமதம் தமிழகத்தை மாநிலங்களவையில் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தடுக்கிறது என்றும், இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. இதனால் அரசியலமைப்பின் கீழ் மூன்று இடங்களுக்கும் தனித்தனியாக இடைத்தேர்தல்களை நடத்த வேண்டும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவை தொகுதிக்கு போட்டியிட தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் திமுகவில், இரண்டாம் நிலை தலைவர்களில் இந்த பதவிக்காக போட்டியிடும் சூழ்ல உருவாகியுள்ளது. இதில் தங்க தமிழ் செல்வனுக்கும் கார்த்திகேயா சிவசநாதிபதி 2 இடங்களை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் ஏற்கனவே சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பு வழங்குவது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதை கட்சியினர் விரும்பவில்லை என்றும், சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் நிலையில், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சட்டசபை தேர்தலில் 40 தொகுதிகள் வரை கேட்டு 25 தொகுதிகளை பெற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடத்தை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டசபை தேர்தலின்போதேகாங்கிர திமுக இடையே வாய்வழி ஒப்பந்தாமாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெறுவது இடைத்தேர்தல் என்பதால், பதவிக்காலம் குறைவாக உள்ளது. இதனால் முழு பதவிக்காலத்தையும் எதிர்நோக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் முழு பயன் தராது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் எம்பி ஆக இருந்து மரணமடைந்த முகமது ஜான் மற்றும் ராஜினாமா செய்த வைத்தியலிங்கம் ஆகியோரின் பதவிக்காலம் குறைந்த ஆண்டுகள் என்ற நிலையில், அதிமுகவில் ராஜினாமா செய்த மற்றொரு எம்பி கே.பி.முனுசாமிக்கு இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதால், அந்த இடத்தை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. புதிதாக 6 ஆண்டுகள் பதவிக்காலம் வேண்டும் என்றால் மேலும் ஒரு வருடம் காத்திருக்கு வேண்டும் என்பதால், ஒரு வருடம் குறைந்தாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் கட்சி எண்ணுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-second-rung-leaders-heavy-competition-to-rajya-sabha-mp-election-317975/