சனி, 26 ஜூன், 2021

கம்யூனிஸ்ட் எம்எல்ஏவிடம் உட்கார்ந்து மனு வாங்கிய அமைச்சர்கள்

Minister And MLA Marimuthu Meet :மக்களின் கோரிக்கை மனுவை கொடுக்க வந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவிடம் திமுக அமைச்சர் அமர்ந்துகொண்டே மனு வாங்கியது தற்போது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற்றுள்ளதால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனி பெரும்பான்மையில் திமுக ஆட்சிபெறுப்பேற்றுள்ளது. இதனையடுத்து கடந்த மே 7-ந் தேதி பொறுப்பேற்ற திமுக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 


இந்நிலையில், திமுக கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ மாரிமுத்து, தனது தொகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக, நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரைச் சந்தித்து மனு அளித்த்து தொடாபாக புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.  மேலும் எம்எல்ஏ மாரிமுத்துவும் இந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்தார்.  அதில் அமைச்சர்கள் நாற்காலியில் அமர்ந்தவாறு மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் சந்திரகுமார், `தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற, அமைச்சர்களைச் சந்தித்து, கோரிக்கை விண்ணப்பம் அளித்துவரும் எம். எல்.ஏ மாரிமுத்துவின் முயற்சி, பாராட்டுக்குரியது. இதை நிறைவேற்ற உறுதியளித்த அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவிப்போம். ஆனால் அமைச்சர்கள் கோரிக்கை விண்ணப்பத்தை, சட்டமன்ற உறுப்பினரிடம் எழுந்து நின்று பெற்றிருக்க வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினரை அமரச்செய்து மனுவைப் பெற்றிருக்க வேண்டும். அமைச்சர்கள் தேவையற்ற விமர்சனங்களுக்குள்ளாவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்’ எனத் என கூறியிருந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள  எம்எல்ஏ மாரிமுத்து, “நேற்று சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிவுற்றதும், திருத்துறைப்பூண்டி புறவழிச் சாலைப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டிய கோரிக்கைக்காக மாண்புமிகு பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்களைச் சந்தித்து விண்ணப்பம் கொடுக்க அவரது அறைக்குச் சென்றேன். அப்போது அவர் என்னை எழுந்து நின்று வரவேற்று, எதிரிலிருந்த இருக்கையைக் காட்டி அமரும்படி கேட்டுக்கொண்டார்.

நான் மேலும் சில அமைச்சர்களையும், முதலமைச்சரையும் சந்திக்க வேண்டிய அவசரம் காரணமாக நின்றபடியே கோரிக்கை விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். மேலும், அதைத் தொடர்ந்து முத்துப்பேட்டை தனி தாலுகா கோரிக்கைக்காக மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்றபோது, மாண்புமிகு அமைச்சர் அவர்களும் என்னை அமரச் சொன்னார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.  அப்போது என்னிடம் மிகுந்த அக்கறையோடு விசாரித்ததோடு, அமைச்சர் என்ற முறையில், `எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்க. எதுவானாலும் செய்து தருகிறேன். அவைக்குப் புதியவர் என்ற தயக்கம் வேண்டாம்’ என எனக்கு ஊக்கமளித்து, கனிவாகப் பேசினார்.

அப்போது அவர் எழுவதற்குள் மூத்த அமைச்சர் என்பதால் நானே எழுந்து மனு அளித்தேன். அதன் பிறகும் அவசரமாக வேறு பணிக்குச் சென்றேன். உண்மைநிலை இவ்வாறிருக்க, அவரசத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியானதால் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது. இது வருத்தமளிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எம்எல்ஏ இது குறித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்