திங்கள், 14 ஜூன், 2021

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… சிவசங்கர்பாபா மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்… பின்னணி என்ன?

 13.06.2021 

சென்னையில் பி.எஸ்.பி.பி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு புகார் எழுப்பிய சம்பவம் பற்றி எரிந்த நேரத்தில்தான், சுஷில் ஹரி பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா மீதும் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பாலியல் தொந்தரவு புகார்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

யார் இந்த சிவசங்கர் பாபா

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர்தான் சிவசங்கர் பாபா. இவருடைய இயற்பெயர் சிவசங்கரன். ஆன்மீகம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 72 வயதான சிவசங்கர் பாபா கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் ரெசிடென்ஷியல் பள்ளியை நடத்தி வருகிறார்.

சிவசங்கர் பாபா தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகளிடம் நான் தான் கிருஷ்ணன், நீங்கள் எல்லோரும் கோபியர்கள் என்று சொல்லி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் புகார்களை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், பள்ளி நிர்வாகம் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் தெரிவித்தது. அதே நேரத்தில் பள்ளி நிர்வாகிகள் ஆணையத்தின் முன்பு ஆஜரானார்கள்.

இந்த சூழலில்தான், சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார்களைத் தெரிவித்து 3 மாணவிகள் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

சிவசங்கர் பாபாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் எப்போது விசாரணை தொடங்கும் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில்தான், தமிழ்நாடு தலைமை டிஜிபி திரிபாதி இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். ஏற்கெனவே, சென்னையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜூடோ மாஸ்டர் கெபிராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சிவசங்கர் பாபா மீதான வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கு வேகம் எடுக்கும் என்று தெரிகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக விரைவில் ஒரு சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார்.

தற்போது, சிவசங்கர் பாபா உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக உத்தரக்காண்ட் மாநிலம் டேரடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் போலீசாரிடம் சான்றுகளை சமர்ப்பித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சிவசங்கர் பாபா வெளி மாநிலத்தில் இருப்பதால், அங்கே சென்று விசாரணை நடத்த வேண்டும். என்பது உள்ளிட்ட பல காரணங்களால் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீதான விசரணையை விரைவில் மேற்கொள்வார்கள் என்றும் அதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/sivasankar-baba-case-transfers-to-cbcid-police-investigation-313561/