18/06/2021 லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார். இவர், லட்சத்தீவுகளில் மாட்டிறைச்சிக்குத் தடை மது விற்பனைக்கு அனுமதி உட்பட பல்வேறு சட்டத் திருத் தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பிரபுல் படேலை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லட்சத்தீவுகளில் பிறந்த நடிகை ஆயிஷா சுல்தானா, மலையாளத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது கொரோனா பாதிப்பு இல்லாத லட்சத்தீவுகளில் தொற்று பரவ, பிரபுல் படேல் காரணம் என்று விமர்சித்தார். லட்சத்தீவுகளை அழிக்க மத்திய அரசு அனுப்பி வைத்த உயிரி ஆயுதம் (bio-weapon) என்று அவரை கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து லட்சத்தீவுகளின் பாஜக தலைவர் அப்துல் காதர், சுவரொட்டி காவல் நிலையத்தில் ஆயிஷா சுல்தானா மீது புகாரளித்தார். இதையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு, அரசின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி, நடிகை ஆயிஷா சுல்தானா தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், போலீஸ் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் முன்ஜாமின் வழங்கியுள்ளது.
source https://news7tamil.live/kerala-hc-grants-interim-anticipatory-bail-to-filmmaker-ayesha-sultana.html