தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதை அடுத்து, எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.
அடுத்து நடந்த கூட்டத்தில் ஒரு வழியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக கு. செல்வபெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக எஸ். ராஜேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பிற சட்டமன்ற பொறுப்பாளர்கள் அந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப் படவில்லை.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 21 முதல் தொடங்கும் என்று சபாநாயகர் அறிவித்ததையடுத்து, கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக கு. செல்வபெருந்தகையும் துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரும் செயல்படுவார்கள்.
காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி செயல்படுவார். துணை கொறடாவாக ஜெ.எம்.ஹெச். ஹசன் மௌலானா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், செயலாளராக ஆர்.எம்.கருமாணிக்கம் மற்றும் பொருளாராக ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயதாரணி தற்போது கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/congress-mla-vijayadharani-elected-as-party-whip-in-tamilnadu-assembly-315639/