பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த முத்துமனோ (27) சிறைக் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஏப்ரல் 22ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், தெவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இயக்கங்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முத்துமனோ மரணத்துக்கு நீதி கேட்டு சமூக ஊடகங்களில் குரல் எழுப்பியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ. இவர் பணகுடியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் போலீசார் அவரைக் கைது செய்து கடந்த வாரம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கே சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கைதி முத்துமனோ ஏப்ரல் 22ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார்.
விசாரணைக் கைதி முத்துமனோ கொலை குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறையிலிருக்கும் 7 பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறையிலுள்ள அலுவலர்கள், காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைதி முத்துமனோ கொலை வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவருடைய உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், வாகைகுளம் கிராமத்தினரும் தொடந்து 66 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் இயக்கங்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் #முத்துமனோவிற்கு நீதி எங்கே என்று ட்வீட் செய்து கவனத்தை ஈர்த்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/muthumano-lockup-death-in-palayamkottai-central-jail-his-relatives-and-political-parties-protest-for-justice-317814/