Tamilnadu Tourism Tamil News: மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சுற்றுலா துறை ஒரு முக்கிய துறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலா துறையில் சில மாற்றங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தவிர வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கவும், ட்ரெக்கிங் செல்லவும் பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்தும் வருகிறது.
அந்த வகையில், சுற்றுலாப் பயணிகள் ‘சுற்றுச்சூழல் – சுற்றுலா’ செல்ல வனத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வனப்பகுதி அனுபவக் கழகம், ஏற்கனவே 5 சுற்றுச்சூழல் சுற்றுலா இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த 5 இடங்களில் மலையேற்றம் மற்றும் வனப்பகுதிகளில் முகாமிடுதல் போன்ற நடவடிக்கைகளை சுற்றுலாத் துறை நெறிப்படுத்த வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் – சுற்றுலா பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு இருந்தாலும், மலையேற்றம் மற்றும் வனப்பகுதிகளில் முகாமிடுதல் போன்றவை சிறிய அளவிலே ஏற்பாடு செய்யப்பட்டன. இது அரசுக்கு பெரியதாக வருவாய் ஈட்டவில்லை என கூறப்படுகிறது. “தற்போது சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு வருவாய் ஈட்டுவதே யோசனை என்று குறிப்பிட்டுள்ள ஒரு சுற்றுலாத் துறை அதிகாரி, சுற்றுலாத் துறையில் சில விஷயங்களை நெறிப்படுத்துவதன் மூலம் போதிய வருவாயை அரசு ஈட்டலாம் என தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன நிலத்தை தனியார் நிறுவங்களுக்கு குத்தகைக்கு விட முடியாது என்பதால் இதை தற்போது அரசே கையில் எடுத்திருக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் சுற்றுலாத் தொகுப்புகளின் ஒரு பகுதியாக முகாம், வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள், ஜங்கிள் சஃபாரி மற்றும் மலையேற்றம் வழங்கப்பட உள்ளது எனவும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் வழிமுறைகளை தமிழகம் பின்தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
“தமிழகத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு போதுமான வசதிகள் இல்லை. உள்கட்டமைப்பு வசதி முறையாக இருக்கும் பட்சத்தில், சுற்றுச்சூழல் சுற்றுலா உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச பயணிகளையும் ஈர்க்கும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் மேலாளர் என்.ரவி ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழுக்கு அளித்த பேட்டியில், ” 10 வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஆனைமலை, கொல்லிமலை மற்றும் ஏற்காடுக்கு போன்ற பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் சுற்றுலா அம்சங்களை உள்ளடக்கிய தொகுப்புகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கி வந்தது. நாங்கள் வனத்துறையுடன் சேர்ந்து திரிசூலம் மலைப்பகுதியில் மலையேற்றத்தை நடத்தினோம். சுவாரஸ்யமாக, இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், வனப்பகுதியில் அரசு துறைகளால் சுற்றுச்சூழல் சுற்றுலா தொகுப்புகள் வழங்கப்படும்போது, பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-in-tamil-tn-palns-to-forest-treks-camps-to-boost-eco-tourism-332902/