Information technology minister T Mano Thangaraj Tamil News: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது முதல் பட்ஜெட்டை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழத்தின் 7 இடங்களில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய வர்த்தக சம்மேளனம் (SICCI) ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் ‘தொழில்நுட்ப வட்டமேசை: செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரத் துறையில் அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் பேசிய அவர், தமிழகத்தை ஒரு தொழில்நுட்ப மிக்க மாநிலமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
மேலும் இது குறித்து பேசிய அமைச்சர் மனோஜ் தங்கராஜ், “கிராமங்களில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு தரும் விதமாக 12,534 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய பாரத்நெட் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இது கிராமப்புறங்களில் இணைய இணைப்பை மேம்படுத்தும். தமிழத்தின் 7 இடங்களில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் உள்கட்டமைப்பை அதிகரிப்பது, அதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடிய அனைத்து தகுதிகளும் (திறமையான மனிதவளம், உள்கட்டமைப்பு, திறன் மற்றும் கொள்கைகள்) தமிழகத்திற்கு உள்ளது. செயற்கை நுண்ணறிவு பிரிவில் தமிழகம் தன்னிறைவு பெறவும், நாட்டின் முதன்மையான மாநிலமாகவும் திகழ இந்த தகுதிகள் உறுதி படுத்தும்.” என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-in-tamil-tn-willve-it-based-special-economic-zones-in-7-places-say-it-minister-332381/