15 08 2021 இந்தியா இன்று 75 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார் ஸ்டாலின்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தரும் முதல்வர் 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்திய நாட்டின் தியாகிகள் அனைவருக்கும் என் வீர வணக்கம். கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றும் வாய்ப்பை அளித்த மக்களுக்கு நன்றி. சுதந்திர தினத்தில் முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கார்கில் போரின் போது பிரதமரிடம் 3 தவணைகளாக ரூ.50 கோடி வழங்கிய அரசு அன்றைய திமுக அரசு.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு 150ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட இருப்பது இந்த ஆண்டில் தான். வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக் காற்றை கொண்டு கட்டப்பட்டது தான் நினைவுத் தூண். விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் வளமான தமிழகத்தை உருவாக்க நினைத்தார்கள்.
கொரோனா தொற்று ஏராளமான படிப்பினையை நமக்கு தந்துள்ளது. கொரோனா எதிர்ப்பு போரில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.4 ஆயிரம் 2 தவணைகளாக வழங்கப்பட்டது. தடுப்பூசி வீணடிக்கப்பட்ட நிலையை மாற்றி அதிகமாக தடுப்பூசி செலுத்தும் மாநிலமாக மாறி இருக்கிறோம்.
பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழக மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்று 101ஆவது நாள். பெரும் நிதி சுமைக்கு இடையில் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறேன். அரசின் பொருளாதாரமும், தனி மனிதர்களின் பொருளாதாரமும் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை அரசு தீர்த்து வருகிறது.
மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். காந்திய சிந்தனைகளை இளைஞர் மனதில் ஆழப்பதிய வைக்க சூளுரைப்போம். சாதி, மதம், இனம் குறித்த சவாலை எதிர்கொண்டிருக்கும் நாட்டை வழிநடத்த கிடைத்த ஆயுதமே காந்திய சிந்தனை.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-75th-independence-day-celebration-cm-stalin-speech-332591/