03 08 2021 இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கொரோனா தொற்றுநோய் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதைக் காட்டும் இந்தியாவின் இனப்பெருக்க எண் அல்லது R-எண், 1 ஐ விட அதிகமாக உள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
1-க்கு மேல் உள்ள R-எண் என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரால் சராசரியாக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படுவதாகும், மேலும் இது பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கிறது.
கடந்த வாரத்தில், நாட்டில் பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளில் 49.85 சதவீதம் கேரளாவிலிருந்து பதிவாகியுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியது.
செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவின் எட்டு மாநிலங்களில் R-எண் அதிகமாக உள்ளது. இந்த எண் ஒன்றுக்கு மேல் இருக்கும் போதெல்லாம், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவகிறது என்று அர்த்தம். நாம் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவை சராசரியாக 1.2 R எண்ணைக் கொண்டுள்ளன. என்று கூறினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், R-எண் ஜூன் கடைசி வாரம் வரை குறைந்து வருவதாக முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் அடுத்த காலகட்டத்தில், ஜூன் 20 முதல் ஜூலை 7 வரை, R-எண் கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் சீதாப்ரா சின்ஹா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழுவின் பகுப்பாய்வு, மே 15 மற்றும் ஜூன் 26 க்கு இடைப்பட்ட காலத்திற்கு R-எண் 0.78 ஆக இருந்தது என்றும் அடுத்து ஜூன் 20 முதல் ஜூலை 7 வரையிலான கால கட்டத்தில் நாடு முழுவதும் R-எண் 0.88 ஆக உயர்ந்து உள்ளது என்றும், தெரிவித்துள்ளது.
லாவ் அகர்வால் மேலும் கூறுகையில், “கேரளாவின் 10 மாவட்டங்கள் உட்பட நாட்டில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த இந்த 18 மாவட்டங்கள், இப்போது மொத்த கொரோனா பாதிப்புகளில் 47.5 சதவிகிதத்தை வழங்குகின்றன. மேலும், 44 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்கள் கேரளா, மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்தில் உள்ளன. 222 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜூன் 1 அன்று, 279 மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் இந்த எண்ணிக்கை இப்போது 57 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது.
இரண்டாவது அலை இந்தியாவில் இன்னும் முடிவடையவில்லை என்றும் லாவ் அகர்வால் கூறினார். உலகெங்கிலும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை, என்றும் லாவ் அகர்வால் கூறினார்.
தடுப்பூசி பற்றி பேசிய சுகாதார அமைச்சகம், நாட்டில் இதுவரை 47.85 கோடி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 37.26 கோடி முதல் டோஸ் மற்றும் 10.59 கோடி இரண்டாவது டோஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மே மாதத்தில் 19.6 லட்சம் டோஸ்களையும், ஜூலை மாதம் 43.41 லட்சம் டோஸ்களையும் வழங்கினோம். ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட தடுப்பூசி அளவுகளின் மொத்த எண்ணிக்கை மே மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ”என்று லாவ் அகர்வால் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/covid-cases-rising-high-reproductive-number-in-eight-states-govt-328909/