வியாழன், 5 ஆகஸ்ட், 2021

சத்தியம் டிவி அலுவலகத்தில் புகுந்து தாக்குதல்: பட்டாக் கத்தியுடன் வந்த நபர் யார்?

 04 08 2021 Chennai Sathyam TV Office Attack Tamil News : சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில், பிரபல செய்தி தொலைக்காட்சி அலுவலகமான சத்தியம் செய்தி நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று மாலை 7 மணியளவில் குஜராத் பதிவெண் கொண்ட ஸ்விஃப்ட் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார்.

அங்கிருக்கும் அலுவலக ஊழியர்கள் அவரிடம் விசாரித்தபோது, அலுவல் வேலை ரீதியாக வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து அலுவலக விருந்தினர் என நினைத்த ஊழியர்கள் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்துள்ளனர். வரவேற்பு அறைக்குச் சென்ற அந்த மர்ம நபர் பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய கையிலிருந்த கிட்டார் பேக்கை திறந்து அதனுள் இருந்த பெரிய பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை எடுத்து அங்கிருந்த இருந்த கண்ணாடி ,மேஜை, டிவி, இருக்கைகள், கம்ப்யூட்டர், கதவு என அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி ஆரம்பித்திருக்கிறார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, ‘அருகே வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி’, வரவேற்பறையிலிருந்த அனைத்து பொருட்களையும் கத்தியால் வெட்டி சேதப்படுத்தியுள்ளார். உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த காவல் துறையினர் கத்தியுடன் நின்ற அந்த மர்ம நபரைப் பிடித்து அவரிடம் இருந்த பட்டாக்கத்தி, கேடயம் மற்றும் குஜராத் பதிவெண் கொண்ட ஸ்விஃப்ட் கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநரைக் கொலை செய்ய வேண்டும் எனக் கூறிக்கொண்டே அந்த மர்ம நபர் காரில் எறியுள்ளார். செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் தாக்குதலில் ஈடுபட்ட இந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-sathyam-tv-office-attack-tamil-news-328995/