06 08 2021
Tamilnadu News Update : தமிழகத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களில் பல்வேறு தலைவர்கள் பற்றிய குறிப்புகள் பாடமாக அமைந்துள்ளது. இதில் தலைவர்களில் பெயருக்கு பின்னர்ல் அவர்களின் சாதி பெயருடன் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகத்தில் தலைவர்களின் சாதி பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் தமிழுக்கு அளித்த மகத்தான போற்றும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் அவர் வாழ்க்கை வரலாறு குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. இதுவரை ஊ.வே.சாமிநாத ஐயர் என்று இருந்த அவரது பெயரை தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகம் சாதி அடையாளத்தை நீக்கும் நடவடிக்கையின் காரணமாக உ.வே.சாமிநாதர் என்று மாற்றியுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகத்தில், இடம்பெற்றுள்ள சுவாமிநாத ஐயரின் ‘பண்டைய காலத்து பள்ளிகூடங்கள்’ (பண்டைய கால பள்ளிகள்) என்ற பாடப்பகுதியில் உ.வே.சாமிநாதர் என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற பெயர் மீனாட்சிசுந்தரனார் என்றும், முதல் தமிழ் நாவலின் ஆசிரியரான மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயர் வேதநாயகம் என்றும் மாற்றப்பட்டள்ளது. இலங்கைத் தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம்பிள்ளை என்பது தாமோதரனார் என்றும், கவிஞர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கனார் என்றும், மாற்றப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டில், திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் ஈ.வே. ராமசாமியின் நூற்றாண்டு விழாவில் பேசிய, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இருந்து சாதி குறிப்புகளை அகற்ற தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 1997 ம் ஆண்டு, தென் மாவட்டங்களில் நடந்த சாதிய கலவரத்தைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில், போக்குவரத்து கழகங்களில் இருந்த பல்லவன், பாண்டியன், சேரன், சோழன் மற்றும் பட்டுக்கோட்டை அழகிரி போன்ற பெயர்களும் நீக்கப்பட்டது.
தற்போது பாடபுத்தகங்களில் தலைவர்களின் பெயர்களை நீக்கியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பலவகையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/caste-name-removed-in-text-book-leaders-reaction-tamilnadu-329542/