வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: கட்சியினர் அஞ்சலி

 05 08 2021 

Admk Leader Madhusudhanan passed away: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று பிற்பகல் 3.42 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 81.

அதிமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன், கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவத்தொடங்கியது. இது தொடர்பாக விளக்கமளித்த அதிமுக நிர்வாகம் வதந்திகளை நம்ப வேண்டாம், மதுசூதனன் நலமுடன் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் பலரும் அவரை மருத்தவமனையில் சந்தித்து நலம விசாரித்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் மதுசூதன்னை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிமுக முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

இந்த நிலையில், (இன்று ஆகஸ்ட் 5), பிற்பகல் 3.42 மணியளவில் மதுசூதனனின் உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவ மனை தெரிவித்தது. மதுசூதனனின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ் அணி மற்றும் ஒபிஎஸ் அணி என 2-ஆக பிரிந்த போது தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர்செல்வத்திற்கு முதலில் ஆதரவு அளித்தவர் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-leader-madusudanan-news-apollo-hospital-chennai-329434/