வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பினராயி விஜயன் பணக் கட்டை யுஏஇக்கு எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு – சுங்கத்துறை

 கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட ராஜதந்திர சரக்கு மூலம் தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், முதல்வர் பினராயி விஜயன் 2017ம் ஆண்டில் எமிரேட்ஸுக்கு சென்றபோது, ​​ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு கட்டு யுஏஇ பணத்தை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் பி.எஸ் சரித் இந்த அறிக்கையை வெளியிட்டதாக சுங்கத் துறை கூறியது. தங்கக் கடத்தல் வழக்கை சுங்கத்துறை விசாரித்தபோது, ​​ஆகஸ்ட் 2019ல், துணைத் தூதரகத்தின் முன்னாள் நிதித் தலைவர் காலித் முகமது அல் ஷௌக்ரியால் 1,90,000 அமெரிக்க டாலர் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டது

சட்டவிரோதமாக டாலர் எடுத்துச்செல்லப்பட்டதில் குறிப்பிடப்பட்ட 6 பேருக்கு ஜூலை 29ம் தேதி விளக்கம் அளிக்க கோரி வழங்கப்பட்ட நோட்டீஸில் பினராயி விஜயனுக்கு எதிரான இந்த கூற்றை சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

ஷௌக்ரி, சரித், ஸ்வப்னா சுரேஷ் (அப்போது துணைத் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக இருந்தார்) மற்றும் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உட்பட 6 பேர், இந்த வழக்கில் ஆதாங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு, 30 நாட்களுக்குள் தங்கள் பதிலை பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

முன்னதாக, வெளிநாட்டு பணத்தைக் கடத்திய விவகாரத்தில் சிபிஎம் தலைவரும் முன்னாள் சட்டமன்ற சபாநாயகருமான பி ஸ்ரீராமகிருஷ்ணனின் பெயரும் வந்தது. ஸ்ரீராமகிருஷ்ணன் சுங்கத்துறை தனக்கு விளக்கம் கேட்டு எந்த நோட்டீஸையும் வழங்கவில்லை என்று புதன்கிழமை குறிப்பிட்டார். “சுங்கத்துறை எனது அறிக்கையையும் எனது குற்றமற்ற தன்மையையும் நம்புகிறது. இல்லையெனில், அவர்கள் எனக்கும் ஒரு நோட்டீஸை அளித்திருப்பார்கள்” என்று கூறினார்.

தங்கக் கடத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சிவசங்கர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சரை சிக்க வைக்க அமலாக்க இயக்குநரகம் மேற்கொண்ட முயற்சி குறித்து விசாரிக்க பினராயி விஜயன் அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. தனியாக இணை விசாரணை மேற்கொள்வது விசாரணையை தடம்புரளச் செய்யும் என்று நீதிமன்றம் கூறியது.

மே 7ம் தேதி இடதுசாரி அரசாங்கம் விசாரணை ஆணையத்தை நியமித்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.

சரித், விஜயன் பெயரைக் குறிப்பிட்டுள்ள செய்திகளுக்கு பதிலளித்த கேரள முதல்வர் அலுவலகம், “இந்த பிரச்சினைக்கு எந்த எதிர்வினையும் தேவையில்லை. இது கடந்த காலத்தில் நிறைய விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் எங்களை எந்த வகையிலும் பாதிக்காது. கடந்த மாதம் விளக்கம் அளித்து நோட்டீஸ் வெளியிடப்பட்டது. ஆனால், மாநில அரசின் விசாரணை ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சுங்கத்துறை தனது அறிவிப்பில் கூறுகையில், “விசாரணையின் போது, ​​சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்கள் முன்னாள் தூதரக ஜெனரல் ஜமால் ஹுசைன் அல் ஜாபி, அலி ஷௌரிக்கிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை… அவர்கள் நாட்டில் இல்லாததால்… விசாரணையில் அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்களின் தொடர்பும் தெரியவந்தது… இருப்பினும், முக்கிய நபர்களான அல் ஜாபி மற்றும் அலி ஷௌக்ரி ஆகியோரை இதுவரை ஆய்வு செய்ய முடியாததால், ஆதாரங்களின் அடிப்படையில் இங்கெ உள்ள பெயர் குறிப்பிடப்பட்ட அல்லது குறிப்பிடப்படாத நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுங்கவரிச் சட்டம் பிரிவு 124 -ன் கீழ் சரித் தனது அறிக்கையில், 2017ம் ஆண்டின் தொடக்கத்தில், பொது நிர்வாகத் துறையிலிருந்து (மாநில அரசின்) அழைப்பு வந்ததாகச் சொன்னார். தூதுக்குழு வருகைக்கான ஏற்பாடுகள் தூதரகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட, பின்னர், ஸ்வப்னா மற்றும் தூதரக ஜெனரல் ஜமால் அல் ஜாபி பயணத் திட்டங்களைக் கையாண்டனர்.

சரித் குறிப்பிட்டுள்ளபடி, ஸ்வப்னா இது தொடர்பாக விஜயனின் உதவியாளர் சிவசங்கரின் தொடர்பு எண்ணை நாடினார்.

சரித், விஜயன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிறகு, ஸ்வப்னா அவரை அழைத்து, முதல்வர் எடுத்துச் செல்ல மறந்துவிட்ட ஒரு பாக்கெட்டைத் தூதரகம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். பொது நிர்வாகத் துறையின் ஊழியரிடமிருந்து செயலகத்திலிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்ததாக சரித் கூறினார்.

விளக்கம் அளிக்கும் நோட்டீஸ், தூதரகத்தின் விருப்பம் காரணமாக எக்ஸ்ரே இயந்திரத்தின் மூலம் பாக்கெட்டை வைக்க முடிவு செய்ததாக சரித் கூறியதாக மேற்கோள் காட்டுகிறது. “பாக்கெட்டில் ஒரு கட்டு பணம் மற்றும் வேறு சில பொருட்கள் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். அவர் இதை ரகசியமாக ஸ்வப்னாவிடம் தெரிவித்தார். ஸ்வப்னாவின் அறிவுறுத்தல்களின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணம் செய்த துணைத் தூதரகத்தின் நிர்வாகத்துடன் இணைந்த அஹமத் அல் தௌக்கியிடம் அவர் அந்த பாக்கெட்டை தலைமை தூதர் வழிகாட்டுதலின் பேரில் முதல்வரிடம் ஒப்படைத்தார்.

ஸ்வப்னா சுங்கத்துறைக்கு அளித்த தனது அறிக்கையில் இதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. சிவசங்கர் அவளை அழைத்து, யுஏஇ-க்கு முதல்வருக்கு அனுப்ப வேண்டிய முக்கியமான பாக்கெட் இருப்பதாக கூறினார். அவர் அல் தௌக்கி பாக்கெட்டை எடுத்துக்கொண்டதாக கூறினார்.

அக்டோபர் 10, 2020 அன்று ஸ்வப்னா சுங்கத்துறைக்கு அளித்த அறிக்கையையும் இந்த விளக்கம் அளிப்பு நோட்டீஸ் மேற்கோள் காட்டுகிறது. தூதரக அதிகாரி ஷௌக்ரி மற்றும் அல் ஜாபி ஆகியோர் பல முறை சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளிநாட்டு பணத்தை கொண்டு சென்றனர். ஸ்வப்னாவும் சரித்தும் ஷௌக்ரியுடன் இணைந்து மஸ்கட் வரை டாலர்களை கடத்தியதாக ஸ்வப்னா கூறியுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குரல் பதிவு மற்றும் கடிதத்தின் உள்ளடக்கங்கள் மாநிலத்தின் அரசியல் முன்னணியின் தலைவர்களைப் பொய்யாக இணைக்க பயன்படுத்த முடியுமா என்று விசாரிக்க மாநில அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம், இந்த இயல்பான கேள்விகளுக்கு இணையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக செல்லும் என்று கூறியது.

source https://tamil.indianexpress.com/india/gold-smuggling-accused-said-pinarayi-vijayan-carried-bundle-of-cash-to-uae-customs-statement-331775/