ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

 

Tamilnadu Budget Update : தமிழகத்தில் புதிதான ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இன்று 2021-22-ம் ஆண்டுக்கான் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டத்தில், ஆகஸ்ட்  9-ந் தேதி  கடந்த 10 ஆண்டு காலத்திற்கான தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை விடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13-ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், இன்று தமிழக அரசின் 2021-22-ம் ஆண்டுக்காள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அம்சங்களை வெளியிட்டு 3 மணி நேரம் பட்ஜெட் குறித்து உரையாற்றினார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக பேப்பர் இல்லாத இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், தமிழகம் கடன் சுமையில் சிக்கி தவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த்தால். பட்ஜெட்டில் வரிகள் அதிகம் இருக்குமா என்பது குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:

தமிழத்தில் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக குடிசைமாற்று வாரியத்திற்கு ரூ3954 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டதள்ளது.

கிராமப்புறங்களில் அடிப்படைவசதிகளை மேம்படுத்த ரூ1200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

கிராமங்களில் வீடுகள் இல்லாத 8 லட்சத்து 3,924 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும். வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள் அமைக்க ரூ.433 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மீனவர்கள் நலனுக்கு ரூ.1,149 கோடி செலவிடப்படும்.

தமிழகம் முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.

காவல்துறையில் உள்ள 14,317 காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். இதில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369,09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும் 

குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை.

மசூதிகள், தேவாலயங்களைப் புதுப்பிக்க தலா ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் செலவினம் – ரூ.2,61,188.57 கோடி என கணிப்பு 2021-22ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும். 

மகளிர், மாற்றுத்திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம் 

623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்

சிஎம்டிஏ போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.  பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.2,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஈர நிலங்களை மேம்படுத்த தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்கள் கண்டறியப்பட்டு புத்துயிர் அளிக்கப்படும்.

அடுத்து வரும் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த திருத்திய பட்ஜெட் அமலில் இருக்கும் என்று கூறியுள்ள நிதியமைச்சர், பட்ஜெட் உரையில் பெரியார் அண்ணா கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். இதில் நதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும்போது எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவரது அறிவுறுத்தலை அவமதிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-2021-22-budget-update-in-tamil-332173/