காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா, அஜய் மாக்கன், சுஷ்மிதா தேவ் மற்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கணக்குகளும் முடக்கப்பட்டது.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தும், அந்த புகைப்படங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டிருந்தார். இதனால் அவரது டிவிட்டர் கணக்கு தற்காலிமாக முடக்கப்பட்டது.
ட்விட்டரின் நடவடிக்கை எதை விளக்குகிறது?
ட்வீட்களை நீக்குதல் மற்றும் கணக்குகளை முடக்குதல் ஆகியவை இந்தியச் சட்டங்கள் மற்றும் ட்விட்டரின் சொந்த கொள்கைகளின்படி அது செயல்படும் நாட்டின் சட்டங்களை அமல்படுத்துவதற்கான விருப்பங்களின்படி செய்யப்படுகிறது என்று ட்விட்டர் கூறுகிறது.
ராகுல்காந்தி, தலித் பெண்ணின் பெற்றோரின் முகங்களைக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்ததில், சிறார் நீதிச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டப் பிரிவுகளை மீறியிருந்தார். இரண்டு சட்டங்களும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று கட்டளையிடுகின்றன.
இதனை தானாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (The National Commission for Protection of Child Rights – NCPCR), இந்த செயல், பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையை மீறுவதாகும் என புகார் அளித்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை தற்காலிமாக முடக்க ட்விட்டர் நிறுவனம் உத்தரவிட்டது.
ராகுல் காந்தியின் ட்வீட் நீக்கப்பட்டது மற்றும் அவரது கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டதை தொடர்ந்து, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சுர்ஜேவாலா மற்றும் மேக்கன் அதே புகைப்படத்தைப் பகிர்ந்தனர். இதனால் அவர்களின் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
ட்விட்டர் உள்நாட்டு சட்டங்களை அமல்படுத்தும்போது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
உள்நாட்டு சட்டங்களை அமல்படுத்த ட்விட்டருக்கு பல விருப்பங்கள் உள்ளன ட்வீட்டின் தெரிவுநிலையைக் கட்டுப்படுத்துதல், கணக்கு வைத்திருப்பவரை ட்வீட்டை நீக்கச் சொல்லுதல் அல்லது அதை நீக்கும் வரை மறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
ஒரு கணக்கின் சுயவிவரம் அல்லது மீடியா பதிவு அதன் கொள்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், அதை தற்காலிகமாக கிடைக்காமல் போக செய்யலாம் அல்லது மீறுபவர் தங்கள் சுயவிவரத்தில் உள்ள தகவலை திருத்த வேண்டும். அவர்களின் சுயவிவரம் அல்லது மீடியா பதிவு எந்த கொள்கையை மீறியுள்ளது என்பது டிவிட்டர் விளக்கும் என அதன் அமலாக்க நடவடிக்கை கொள்கை கூறுகிறது.
ட்விட்டர் சில ட்வீட்டுகளுக்கு அறிவிப்புகளை இணைக்கிறது. அந்த குறிப்பிட்ட ட்வீட்க்கு பதில்கள், மறு ட்வீட்கள் மற்றும் லைக்ஸ்களை அனுமதிக்காதது போன்ற அவர்களின் தொடர்புகளை கட்டுப்படுத்துகிறது. மேலும், அறிவிப்புக்குப் பின்னால் வைக்கப்படும் இத்தகைய ட்வீட்கள், டாப் ட்வீட்கள், பாதுகாப்பான தேடல் அல்லது தளத்தில் அனுப்பப்படும் மின்னஞ்சல் மற்றும் உரை அறிவிப்புகளில் காட்டப்படாது.
காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் ட்வீட் மற்றும் கணக்குகளுக்கு அடுத்து என்ன நடக்கும்?
ட்விட்டரால் குறிப்பிடப்பட்ட அனைத்து ட்வீட்களும் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கு மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது டிவிட்டர் தளத்தில் இருந்து நீண்ட நேரம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும்.
ட்விட்டர் இந்த பயனர்களுக்கு அவர்களின் கணக்குகள் மூலம் நடைபெற்ற விதி மீறல்களின் தன்மை குறித்து மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும். மேலும் ட்வீட்களை நீக்க அல்லது தளத்தின் கொள்கையின்படி நடவடிக்கை எடுப்பதை தெரிவிக்கும். டிவிட்டர் விதிகளை தொடர்ச்சியாக மீறினால் நிரந்தரமாக கணக்கு நீக்கப்படும்.
source https://tamil.indianexpress.com/explained/twitters-action-against-congress-leaders-rahul-gandhi-332043/
13 08 2021