தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, இன்று வெளியிடப்படவுள்ளது. வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதன் அரசியல் முக்கியத்துவம் எத்தகையது? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைத்தால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வார்த்தைகள் அப்படியே ஆளுநர் உரையிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் தான், வெள்ளை அறிக்கை என்றால் தனக்கு என்னவென்று தெரியாது என கூறினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
கருப்பு என்பது, ஒன்றை மறைக்க பயன்படுத்தக் கூடிய வார்த்தை என்பதால், அதற்கு மாறாக, முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையாளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பது. தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகால பேசுபொருளாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் தான், தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புள்ளி விவரங்களுடம் இருக்கும். தமிழகத்தின் வரவு – செலவு கணக்குகள், கடன் அளவு, நிதி இருப்பு உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும் என்பதால், வெள்ளை அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
மேலும், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கையின் நீட்சியாக வெளியிடப்படும் இந்த வெள்ளை அறிக்கை, தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசின் நிதி நிலை, கடன் அளவை மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, மக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த வெள்ளை அறிக்கை உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
source https://news7tamil.live/what-is-mean-by-white-report.html