புதன், 21 அக்டோபர், 2020

தமிழகத்தின், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே இரண்டு முறை பட்டாம்பூச்சி வலசை நடைபெறுகிறது

 ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே இரண்டு முறை பட்டாம்பூச்சி வலசை நடைபெறுகிறது. உணவுக்காகவும், உயிரை காக்கவும் இந்த வலசைகள் நடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழையின் போது தீவிரமடையும் பருவமழையில் இருந்து தப்பித்துக் கொள்ள பட்டாம்பூச்சிகள் மேற்குதொடர்ச்சி மலையின் குடகு, நீலகிரி, சிறுவாணி மலை, ஆனைமலை இருந்து கீழே வந்து அங்கிருந்து கிழக்கு தொடர்ச்சி மலை மடிப்புகளில் இருக்கும் ஏற்காடு, பச்சமலை, கொல்லி மலை, கலவராயன் மலைகளுக்கு சென்றுவிடுகிறது. பருவமழைக்கு முன்பு, மே, ஜூன் காலங்களில் இந்த இடபெயர்வு நடைபெறுகிறது.

South India butterfly migration : check the facts you never knewCommon Crow – புகைப்பட உதவி : Jeswin Kingsly

தென்மேற்கு பருவமழையின் போது கிழக்கு தொடர்ச்சி மலைகள், இந்த பட்டாம்பூச்சிகளுக்கான போதுமான உணவையும் இருப்பிடத்தையும் வழங்குகிறது. இங்கு இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்டு, அடுத்த தலைமுறையை உருவாக்கி மறைகிறது. அடுத்த தலைமுறையை சேர்ந்த பட்டாம்பூச்சிகள், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில், வடகிழக்கு பருவமழைக்கு முன்பு கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளை நோக்கி பயணிக்கிறது. இது ஒரு ஆண்டில் நடைபெறும் இரண்டாவது இடம்பெயர்வு.

South India butterfly migration : check the facts you never knewடார்க் ப்ளூ டைகர் பட்டாம்பூச்சி : புகைப்படம் – ஜெஸ்வின் கிங்க்ஸ்லி

தி நேச்சுரல் அண்ட் பட்டர்ஃப்ளை சொசைட்டி TNBS (The Nature and Butterfly Society) என்று கூறப்படும் கோவையில் இருக்கும் பட்டாம்பூச்சி ஆர்வலர் குழுவினரின் அறிக்கைப்படி, இதுவரை 316 உறுதி செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பட்டாம்பூச்சி இனங்களில் 20 முதல் 30 பட்டாம்பூச்சிகள் மட்டுமே தன்னிடம் விட்டு மற்றொரு இடத்திற்கு இவ்வாறு வலசை செல்கிறது என்று கூறுகின்றனர். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் க்ரோ (Crows) மற்றும் டைகர் (Tiger) ரக பட்டாம்பூச்சிகள் 4 இடம் பெயர்கிறது. இதனுடன் இணைந்து பயணிக்கும் க்ரிம்சன் ரோஸ் வகை பட்டாம்பூச்சிகள் ஒரு பொழுதில் இந்த குழுவில் இருந்து பிரிந்து கடற்கரை மாவட்டங்கள் மார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையை நோக்கி இடம் பெயர்கிறது.

South India butterfly migration : check the facts you never knewஇலங்கை நோக்கி வலசை போகும் க்றிம்சன் ரோஸ் பட்டாம்பூச்சி புகைப்படம் – ஜெஸ்வின் கிங்க்ஸ்லி

”8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, இந்த ஆண்டில் முன்கூட்டியே பட்டாம்பூச்சி இடம்பெயர்வு இடம் பெற்றுள்ளது. எப்போதும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் இந்த இடபெயர்வு இந்த ஆண்டில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் துவங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெற்ருள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்திலும், கிழக்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் லட்சக்கணக்கில் உருவான புதிய தலைமுறை பட்டாம்பூச்சிகளுக்கான உணவு தேவைக்காக முன்கூட்டியே பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து” என்று டி.என்.பி.எஸ் தலைவர் பாவேந்தன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரு மணி நேரத்தில் 1060 பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையாகும்.

Dark blue tiger, blue tiger, common crow மற்றும் double branded crow பட்டாம்பூச்சிகள் தான் இந்த இரண்டு மலைகளுக்கும் மத்தியில் பயணிக்க கூடியவை. ஒவ்வொரு பிரிவும் ஒரு தனிப்பட்ட பாதையில் பயணித்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கி மீண்டும் தங்களின் பயணத்தை துவங்குபவை. உதாரணமாக சில பட்டாம்பூச்சிகள், ஏற்காட்டில் இருந்து நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை வழியாக மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு செல்கின்றன. இதே போன்று தென்னிந்தியாவில் பல்வேறு பாதைகள் வழியாக இவ்விரண்டு மலைகளுக்கும் மத்தியில் பட்டாம்பூச்சிகள் பயணம் செய்கின்றன.

பட்டாம்பூச்சிகளின் செழுமையான இருப்பிடமாக இருக்கும் கோவை

டி.என்.பி.எஸ் மற்றும் சில அரசு சாரா குழுவினர் ஒன்றிணைந்து இந்த பட்டாம்பூச்சி இடம்பெயர்தலை கண்காணித்து பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் 325 பட்டாம்பூச்சி வகைகள் இருக்கிறது என்பதை உறுதி செய்த டி.என்.பி.எஸ் மீண்டும் அந்த பட்டாம்பூச்சிகளை தேட ஆரம்பித்தனர். இதுவரையில் 316 பட்டாம்பூச்சிகள் அப்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் 20 இடங்கள் பட்டாம்பூச்சிகள் அதிகம் வாழும் இடங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. காடுகள், ஈர நிலங்கள், புல்வெளிகள், ஆறுகள் என்று பட்டாம்பூச்சிகள் வாழ தேவையான அனைத்து சூழலையும் கொண்ட கோவை மாவட்டத்தில் 276 பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. மேட்டுப்பாளையம் கல்லாறு பூங்கா மற்றும் அதனை சுற்றி இருக்கும் இடங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்களை காண முடியும் என்றும் பாவேந்தன் கூறியுள்ளார்.

South India butterfly migration : check the facts you never knewஆற்றங்கரையோரம் இருக்கும் மணற்பாங்கான பகுதிகளில் இருந்து கனிமங்களை உறிஞ்சும் ( mud puddling Picture) காமன் எமிக்ரெண்ட் வகை பட்டாம்பூச்சிகள் Courtesy TNBS

50 கோர் நபர்களுடன் இயங்கும் இந்த டி.என்.பி.எஸ் அமைப்பு வாரம் தோறும் Butterfly walk- ஐ நடத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பறவைகள் கணக்கெடுப்பு, ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காணுதல், பட்டாம்பூச்சிகளின் நான்கு வாழ்வியல் நிலைகள் குறித்தும், அது சார்ந்திருக்கும் தாவரங்கள் குறித்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறனர். ”தமிழக பட்டாம்பூச்சிகள் பற்றி ஆராயும் போது எங்களுக்கு எந்தவிதமான தரவுகளும் கிடைக்கவில்லை. சில உள்ளூர்வாசிகள் எப்போது என்ன வகையான பட்டாம்பூச்சிகள் வரும் என்பதை மட்டும் மேலோட்டமாக கூறினார்கள். அடுத்து வரும் தலைமுறையினர் இந்த துறையில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் பட்டாம்பூச்சிகள் குறித்த தரவினை மேற்கொண்டு வருகிறோம் என்றும் கூறினார் பாவேந்தன்.

நீலகிரியில் பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்வு

மழை நாட்களுக்கு முன்பாக கல்லாறு வழியாகவும் தெங்குமரஹடா வழியாகவும் லட்சகணக்கான பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வு நடைபெறும். பட்டாம்பூச்சிகளுக்கான இருப்பிடம் மற்றும் வலசை போகும் போது தங்கும் இடம் மற்றும் உணவு ஆதாரங்கள் நீலகிரியில் அதிகமாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது பட்டாம்பூச்சிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சில தரவுகளை விட்டு சென்றுள்ளனர். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு மக்கள் இதன் மீது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கிறார் விண்டர் ப்ளைத் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மனோஜ் சேதுமாதவன்.

South India butterfly migration : check the facts you never knewஎமிக்ரெண்ட் மற்றும் டார்க் ப்ளூ டைகர் பட்டாம்பூச்சிகள் Picture Courtesy TNBS

 

”இந்த வருடம் எங்கள் குழுவில் இருப்பவர்கள் சிலர் ராஜஸ்தான் வரை பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளனர் என்று கூறியுள்ளனர். தன்னார்வத்துடன் நிறைய நபர்கள் பட்டாம்பூச்சிகள் ஆய்வில் ஈடுபட்டால் நம்மால் முழுமையாக பல விசயங்களை அறிந்து கொள்ள இயலும் என்று கூறுகிறார் மனோஜ் சேதுமாதவன். கடந்த ஆண்டு விண்டர் ப்ளைத் உறுப்பினர்கள் நான்கு பேர் கோத்தகிரி மலைச்சரிவில் டார்க் பைரட் (Dark Pierrot) மற்றும் பாய்ண்டட் லைன்ப்ளூ (Pointed Lineblue) பட்டாம்பூச்சிகளை பார்த்து பதிவு செய்துள்ளனர். 1978ம் ஆண்டு பட்டாம்பூச்சி ஆர்வலர் லார்சன் பி டர்பென் இந்த பட்டாம்பூச்சிகளை கோத்தகிரி மலைச்சரிவுகளில் பார்த்தது தான் கடைசி. அதன் பின்னர் கடந்த ஆண்டு தான் இந்த பட்டாம்பூச்சிகளை (Larsen B Torben) அங்கு பார்க்க முடிந்துள்ளது.

குளிர் காலத்தில் வலசை போகும் காமன் ஆல்பெட்ராஸ் (Common Albetross)

”பட்டர்ஃப்ளை மைக்ரேசன் ஆஃப் இந்தியா என்பது ஒரு வாட்ஸ்ஆப் குழு. எங்களை போன்று பட்டாம்பூச்சிகள் குறித்து அதிக ஆர்வம் நிறைந்தவர்கள் பலர் இந்த குழுவில் இணைந்து தென்னிந்தியாவில் நடைபெறும் இந்த பட்டாம்பூச்சிகள் நகர்வு குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்கிறார் திருவனந்தபுரத்தில் பிளாஸ்டிக் சர்ஜனாக பணியாற்றும் மருத்துவர் காலேஷ் சதாசிவம். திருவாங்கூர் நேச்சுரல் ஹிஸ்ட்ரி சொசைட்டி (Travancore Natural History Society (TNHS)) என்ற அமைப்பு ஒன்றை துவங்கி பல்வேறு ஊர்வன குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார் அவர்.

“ஒரு பட்டாம்பூச்சி இனம் தற்போது பாலக்காடு கணவாயில் பறக்கிறது என்றால், அவர் அதற்கு அடுத்து இருக்கும் ஜோனில் உள்ள தன்னார்வலரிடம் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு பட்டாம்பூச்சிகள் பறக்கிறது. அவை எந்த வகையை சார்ந்தவை, பறக்கும் திசை உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்வார். 2016ம் ஆண்டில் இருந்து இந்த Butterfly Migration India (BMI) forum வாட்ஸ்ஆப் குழு இயங்கி வருகிறது. 200த்திற்கும் மேற்பட்டோர் இந்த குழுவில் இருக்கின்றனர். பெரும்பாலானோர் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

Congregation of butterflies Special Arrangement - Picture Courtesy TNBSCongregation of butterflies  – Picture Courtesy TNBS

”இங்கு இருக்கும் பலருக்கும் எங்கோ மெக்கிசோவில் நடைபெறும் மோனார்க் பாட்டாம்பூச்சியின் இடம்பெயர்வு குறித்து நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் வீட்டிற்கு பின்னால் நடைபெறும் பட்டாம்பூச்சி இடம் பெயர்வு குறித்து ஒன்றும் தெரியாது. பொதுவாக நான்கு வகையான பட்டாம்பூச்சி இடம் பெயர்வுகள் இருக்கிறது. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே நடைபெறுவது உள்ளூர் வலசை (Local Migration) என்போம். ராமேஷ்வரம் வழியாக இலங்கை போன்ற நாடுகளுக்கு செல்லும் க்றிம்சன் ரோஸ் பட்டாம்பூச்சிகள் ட்ரான்ஸ் நேசனல் (TransNational) வகையில் இடம்பெயர்கின்றன. சில பட்டாம்பூச்சிகள் கண்டம் விட்டு கண்டம் செல்லும். 4000 மைல்களுக்கு பறக்கும் பெய்ண்டட் லேடி பட்டாம்பூச்சிகள் (Transcontinental) ட்ரான்ஸ் காண்டினெண்டல் வகையை சேர்ந்தவை. குளிர்காலத்தில், மலைகளில் இருக்கும் தட்பவெப்ப நிலையை தாங்கிக் கொள்ள இயலாமல், பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு வரும் பட்டாம்பூச்சிகள் high altitude migrators என்கிறோம். காமன் ஆல்பெட்ராஸ் வகை பட்டாம்பூச்சிகள் குளிர்காலத்தில் குடகு மலையில் இருந்து சீன்கன்னி புழா வழியாக கண்ணூரில் இருக்கும் அரளம் வனவிலங்கு சரணாலயத்தில் மையம் கொள்கிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்களில் இங்கே தங்கி இனப்பெருக்கம் செய்து பின்னர் குடகு பகுதியில் இருக்கும் உயர்ந்த மலைச்சிகரங்களுக்கு சென்றுவிடுகிறது” என்கிறார் டாக்டர் காலேஷ்.


உள்ளூர் வலசை செல்லும் பட்டாம்பூச்சிகள் பொதுவாக குளிர்கால உறக்கத்தை கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பட்டாம்பூச்சிகள் மேற்கொள்வது கிடையாது. மலையில் இருந்து நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 கி.மீ பயணிக்கும் அந்த பட்டாம்பூச்சிகள் பள்ளத்தாக்கு மற்றும் சமதள பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 50 கி.மீ வரை பயணிக்கிறது.  கிட்டத்தட்ட முழுமையான இடம் பெயர்வு நடைபெற ஒன்று முதல் ஒன்றரை மாதங்கள் ஆகிறது. பட்டாம்பூச்சிகளின் முன்கூட்டிய நகர்வு என்பது விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்களை தரக்கூடியது. முன்கூட்டியே மழை பெய்வதை குறிக்கும் அறிகுறிகளாகவே பட்டாம்பூச்சி  நகர்வினை காண்கின்றனர் விவசாயிகள்.

கேரளாவை போன்று பல கணக்கெடுப்புகளை தமிழகத்திலும் எதிர்பார்க்கின்றோம்

”நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தில் வனத்துறையினர் பல்வேறு உயிரினங்களின் கணக்கெடுப்பை நடத்துகின்றனர். தும்பி, தவளை, பாம்புகள், பட்டாம்பூச்சி என்று ஆர்வமாக அங்கே கணக்கெடுப்புகள் நடைபெறுகிறது. தமிழகத்திலும் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் வனவிலங்குகள் குறித்த ஒரு ஆர்வம் மக்களுக்கு ஏற்படும். இந்த முறை ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 135 பறவைகள் மற்றும் 118 பட்டாம்பூச்சிகள் இனம் கண்டறியப்பட்டது. இது போன்று தொடந்து பல்வேறு உயிரினங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்கிறார் ஜெஸ்வின் கிங்ஸ்லி. கன்ஹா புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் கிப்லிங் கேம்பின் தலைமை இயற்கையாளராக பணியாற்றுகிறார் அவர்.