செவ்வாய், 20 அக்டோபர், 2020

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலங்கானா, ஆந்திரா!

 ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விமானம் மூலமாக பார்வையிட்டார்.

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள் நிரம்பி வருவதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஏராளமான பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விமானம் மூலமாக பார்வையிட்டார். வெள்ள மீட்பு பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஜெகன்மோகன் ரெட்டி மீட்பு பணிகளை முடுக்கி விட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். ஆந்திராவில் இதுவரை மழை, வெள்ளத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.