தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின், முதலாமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.
ஏற்கெனவே, கூட்டுக் குடும்பத்தில் உள்ள திருமணமான பலரும் தங்கள் பெயர்களை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கி புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், தற்போது ஒரு நபர் ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று பொது விநியோகத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ரூ1000 உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதனால் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் பணிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில், போலியான ரேஷன் அட்டைகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் வாங்காத அட்டைகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். ஒரு நபர் ரேஷன் கார்டுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதனால் அந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல்கள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நபர் கார்டுக்கு பொருட்கள் வழங்காமல் திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து கேள்வி கேட்டால், அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்று சொல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். அதனால், தமிழ அரசு, ஒரு நபர் ரேஷன் கார்டுக்கு உரிமைத் தொகை கிடையாதா என்பது குறித்து தெளிவான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ரேஷன் கடைகளில் எந்தவித சிக்கல் இல்லாமல் பொருட்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே நேரத்தில், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கு ஒரு நபர் ரேஷன் கார்டு தகுதி உள்ளதா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/rs-1000-incentives-for-women-the-head-of-family-scheme-problem-in-one-person-ration-card-341965/