வியாழன், 16 செப்டம்பர், 2021

சாதி அரசியலையே நம்பி இருப்பதைக் காட்டும் பாஜகவின் புதிய முதல்வர்கள் தேர்வு

 15 09 2021 

BJP CMs, caste politics, caste calculations, tamil news

Liz Mathew

BJP now sticking to caste calculations : பல்வேறு மாநிலங்களில் ஆதிக்க சாதி பிரிவு அல்லாதோரை முதல்வராக நிறுத்திய பாஜக தற்போது மனம் மாறியுள்ளது. பல மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பு, சமீபத்திய நாட்களில் சாதிய சமநிலையை பாதுகாக்கும் வகையில், நேரச் சோதனை யுக்தியை கைப்பற்றி புதிய முதல்வர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது பாஜக.

உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகாவை தொடர்ந்து தற்போது குஜராத்திலும் பட்டீதார் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக அறிவித்து, ஆதிக்க சாதியினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அடிபணிந்தது பாஜக.

இந்த மாற்றங்கள் குறித்து ஹரியானாவின் மனோகர் லால் கட்டார் மற்றும் மகாராஷ்ட்ராவில் இருக்கும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. ஹரியானா மற்றும் மகாராஷ்ட்ராவில் பெரும்பான்மை வகிக்கும் ஜாட் மற்றும் மராத்தா இனத்தை சாராத இருவரையும் மோடி – ஷா கூட்டணி கட்சியை தலைமை தாங்க தேர்வு செய்தது.

அதே போன்று 2016ம் ஆண்டு பட்டீதார்களின் போராட்டம் உச்சம் அடைந்திருந்த சமயத்தில் பாஜக முதன்முறையாக ஜெயின் சமூகத்தை சேர்ந்த ரூபானியை முதல்வராக தேர்வு செய்து ஒரு வலுவான செய்தியை அனுப்பியது. படேல் தலைவர்கள் உட்பட பல போட்டியாளர்களின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், ரூபானியின் கீழ் 2017 தேர்தலில் சறுக்கலை சந்தித்த போதும் ரூபானியை முதல்வராக வைத்திருப்பதில் பாஜக உறுதியாக இருந்தது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரூபானிக்கு அடுத்தபடியாக பட்டீதார் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேலை முதல்வராக தேர்வு செய்து அறிவித்தது பாஜக.

மேலும் படிக்க : குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேலை தேர்வு செய்ய காரணம் என்ன?

மோடி தலைமையிலான பாஜக கூட தேர்தல் கட்டாயங்களை மீற முடியாது என்பதற்கான மற்றொரு அறிகுறி தான் இது என்று கட்சித் தலைவர்கள் பூபேந்திர படேலின் தேர்வு குறித்து ஒப்புக்கொண்டனர். ஆனாலும், மற்ற நன்கு அறிமுகமாக படேல் தலைவர்களை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக எம்.எல்.ஏவாக இருக்கும் ஒருவரை முதல்வராக தேர்வு செய்து தன்னுடைய தனிப் பாணியை கடைபிடித்துள்ளர் பிரதமர் மோடி.

இதற்கு முன்பாக உத்தரகாண்டில், பாஜக தேவேந்திர சிங் ராவத்தை மாநில பாஜக மற்றும் ஆர்.எஸ். எஸ் அமைப்பின் அழுத்தம் காரணமாக வெளியேற்றியது. நான்கு மாதங்களாக முதல்வராக அவர் பணியாற்றியதில் திருப்தி இல்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ராவத்திற்கு பதிலாக மற்றொரு தாக்கூர் பிரிவை சார்ந்த புஷ்கர் சிங் தாமிக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.

நான்கு முறை கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பு வகித்து வந்த எடியூரப்பாவால் டெல்லியில் இருந்து தந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவருடைய சமூகத்தினரை பகைத்துக் கொள்ள இயலாது என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவருக்கு அடுத்தபடியாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை என்ற லிங்காயத்து பிரிவை சேர்ந்த பாஜக தலைவரை முதல்வராக அறிவித்தது அக்கட்சி.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, மோடி – ஷா தலைமையிலான பாஜக, ஆதிக்க சாதிகளுக்கு வெளியே இருந்து ஒருவரை முதல்வராக தேர்வு செய்வது ஒரு சோதனை முயற்சி என்று விவரித்தனர். மோடி புகழின் உச்சத்தில் இருந்ததாலும், வெல்ல முடியாதவராக கருதப்பட்டதாலும், ஆதிக்க சாதியினருடன் பழைய ஈடுபாடுகளின் அடிப்படையில் பிணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தெளிவான செய்தியை அது வெளிப்படுத்தியது. மராத்தா சமூகத்தை சாராத பிராமணரான ஃபட்னாவிஸ் மகாராஷ்ட்ரா முதல்வர் ஆனார். அதே போன்று ஜாட் சமூகத்தை சாராத கட்டார் ஹரியானாவின் முதல்வரானர். பழங்குடியை சாராத ரகுபர் தாஸின் பெயர் ஜார்கண்ட் முதல்வர் பதவிக்கு வந்தது.

அதன் பிறகு மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. ஜார்கண்ட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜனநாயக் ஜனதா கட்சியின் ஆதரவால் அரசை ஒன்றிணைக்க முடிந்தது. தொடர்ந்து கட்டாருக்கு அழுத்தம் வந்து கொண்டிருந்தது. மேலும் விவசாயிகளின் போராட்டம் அவருக்கு அதிக கவலையை அளித்தது.

ஏப்ரல் மாதத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் சாதி தடைகளை உடைக்கும் சோதனை முயற்சிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டதாக அமித் ஷா ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதையே தொடர்ந்து கடைபிடித்தோம் என்றும் அவர் கூறினார். நாங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி அல்லாதோர், ஹரியானாவில் ஜாட் அல்லாதோர் மற்றும் மகாராஷ்ட்ராவில் மராத்தா பிரிவை சாராத ஒருவரை தேர்வு செய்தோம். சாதி தடைகளை உடைக்க அது ஒரு சோதனையாக இருந்துதது. அது ஜனநாயகத்தை வலுப்படுத்தியது. ஆம், அதில் சில பின்னடைவுகள் இருந்தன ஆனால் அது நிச்சயமாக தோல்விகள் அல்ல என்று நான் கூறுவேன். இதுபோன்ற தடைகளை உடைக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

ஆதிக்க சாதியினரையோ அல்லது கட்சிக்கு ஆதரவை அதிகமாக வழங்கும் சமூகத்தையோ புறக்கணிக்க கூடாது என்ற அழுத்தத்தின் கீழ் பாஜக உள்ளது என்று குறைந்தது இரண்டு பாஜக தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். பாஜகவின் மத்திய தலைமைக்கு தற்போது மாநில பாஜக அலகுகளில் இருந்தும் அழுத்தம் தரலாம். மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் இயற்கையாகவே மற்ற கட்சி ஆளும் மாநிலங்களில் அதிருப்தி அடைந்த தலைவர்கள் தைரியம் அடைவார்கள் என்று அதில் ஒரு தலைவர் கூறினார்.

இதனை கூர்ந்து கவனிப்பவர்களில் ஒருவர் உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர் கேஷவ் ப்ரசாத் மௌரியா. பாஜக ஓ.பி.சிகளின் வாக்குகளை மொத்தமாக கைப்பற்ற போகிறது. மௌரியாவும் அந்த பிரிவை சார்ந்தவர் தான். மேலும் தன்னுடைய முதல்வர் கனவை எப்போதும் மறைத்ததே இல்லை. தாக்கூர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி பாஜகவில் இருந்து உயர் சாதி பிராமணர்களை எதிர்த்ததாக நம்பப்படுகிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம் ஆகும். அங்கு மாநிலத்தின் சக்தி வாய்ந்த சமூக பிரிவு ஒன்று சிவராஜ் சிங் சௌவ்கானை அங்கிருந்து மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பு வகிக்க அவர் முயற்சி செய்து வருகிறார்.

source https://tamil.indianexpress.com/india/choice-of-cms-shows-bjp-now-sticking-to-caste-calculations-341609/